இஸ்ரேலில் ஒரே நகரத்தில் 40% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரத்துக்கு வெளியே உள்ள நே பிரேக் நகரில் அவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். சில இன்றியமையாத பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பதாக மூத்த சுகாதாரத் துறை அதிகாரி கூறுகிறார்.

இஸ்ரேலில் மொத்தம் 8,611 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 51பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் முழுவதும் மக்கள் வீட்டைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டமாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அல்லது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனையில் தமக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியான பிறகும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வைரஸ் பரவுவதைத் தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நே பிரேக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னரே போலீஸார் நகருக்குள் நுழையவும், நகரில் இருந்து வெளியேறவும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். இதற்காக நகரைச் சுற்றி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.