ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் -விசேட தொகுப்பு

தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஒருபகுதியான வடக்கு மாகாணம் விசாயம் மற்றும் சிறுதோட்டப் பயிற்செய்கையை பின்புலமாகக் கொண்ட மக்கள் வாழும் மாகாணம்.

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தமது வியர்வையை இரத்தமாகச் சிந்தி வெய்யில் மழை எனப் பொருட்படுத்தாது மண்ணைக் கிண்டி விதைத்து மனிதம் காத்துவரும் விவசாய தெய்வங்கள் வாழும் மண்.

தற்போது புறக் கண்ணுக்கு புலப்படாத கொடிய கொரோனா தொற்று நோய் காரணமாக முழு உலகமே முடங்கிக் கிடக்கின்றது.

இவ்வாறான சவால் மிக்க காலத்திலும் தாம் சிறுகச் சேகரித்த நகைகளை விற்றும், அடகு வைத்தும் கடன்வாங்கியும் கொழுத்தும் வெய்யிலில் தோட்டம் செய்து வரும் விவசாயிகள் தமது விளைபொருட்கள் விளைந்து விற்பனைக்கு ஏற்ற காலத்தில் காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். விவசாயத்தையே வெறுக்கும் அளவு மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வவுனியா கல்மடு, கிடாச்சூரி, ஈச்சங்குளம், இராசேந்திரகுளம், செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம், மாங்குளம், மற்றும் முல்லைத்திவு மாவட்டத்தில் பலகிராமங்களிலும். கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களிலும் தக்காளி, கத்தரி, வெண்டி, கறிமிளகாய், பச்சை மிளகாய், போன்ற சிறுதோட்டப் பயிர்கள் தற்போது நன்றாக விழைந்து சாகுபடி செய்யும் நிறையில் இருந்தாலும் அவற்றை விற்பனை செய்வதற்கு ஏற்ற பொறிமுகைள் இல்லாமல் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

நகர்ப் புறங்களில் காய்கறிகள் தட்டுப்பாடான நிலை காணப்படுகின்றது கிராமப்புறங்களில் காய்கறிகள் விற்பனை செய்யமுடியாத நிலையில் காணப்படுகின்றது இவற்றை நிவர்த்தி செய்வாற்கு கமநல சேவைகள் திணைக்களமும், விவசாயத் திணைக்களமும், பொருத்தமான பொறிமுறைகளைப் பயன்படுத்தி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாக தேவையாகக் காணப்படுகின்றது.