இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எவ்வளவோ முயன்றும் சமரசம் எட்டப்படவில்லை – நெதன்யாஹு

நான் முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆட்சி அமைப்பது தொடர்பான பென்னி கான்ட்ஸுடான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை என்று பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.

20 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு செப்டெம்பர் மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் லிக்குட் கட்சிக்கும் பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளு அன்ட் வொயிட் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் முடிவில் இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தலைமையிலான லிக்குட் கட்சிக்கு 31 இடங்களும் அவரின் கூட்டணிக்கு 55 இடங்களும் கிடைத்தன.

எதிர்க்கட்சியான பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளு அன்ட் வொய்ட் கட்சிக்கு 33 இடங்களும், அவரின் கூட்டணிக்கு 54 இடங்களும் கிடைத்துள்ளன. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை.

பிரதமர் நெதன்யாகு மீண்டும் பிரதமராவதற்கு இன்னும் 6 எம்பிக்கள் இருந்தால் போதுமானது. அதே சமயம் பென்னி கான்ட்ஸ் பிரதமராக 7 எம்பிக்கள் தேவை. ஆனால் இரு கட்சியினருக்கும் இடையே எந்தவிதமான உடன்பாடும் ஏற்படாமல் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நலை நீடிக்கின்றது.

இதனால் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாத சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஆட்சி அமைப்பது தொடர்பாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

லிக்குட் கட்சியின் தலைவர் நெதன்யாஹு, ப்ளு அன்ட் வொய்ட் கட்சியின் தலைவர்கள் கான்ட்ஸ் இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில் யார் பிரதமராவது அல்லது ஆட்சியை சரிசம ஆண்டுகள் பிரித்துக் கொள்வது உட்பட பல உடன்பாடுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் எவ்வளவோ முயன்றும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பென்னி கான்ட்ஸுடன் உடன்பாடு எட்டப்படவில்லை என்று நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெஞ்சமின் நெதன்யாஹு கூறும்போது, “கான்ட்ஸுடன் இணைந்து புதிய அரசை ஒற்றுமையுடன் அமைப்பதற்கு நான் முயற்சித்தேன். மற்றுமொரு தேர்தல் நடக்கக்கூடாது என்பதற்காக நான் என்னால் முயன்ற அனைத்தையும் முயற்சித்தேன்.  ஆனால் அவர் அனைத்தையும் நிராகரித்து விட்டார்“  என்று தெரிவித்துள்ளார்.