ஜனாதிபதி வேட்பாளர்களால் சமஸ்டி தீர்வு காண முடியாது – சித்தார்த்தன்

சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு பிரதான வேட்பாளராலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை காண முடியாது என்பதை ஐந்து தமிழ்க் கட்சிகளும் நன்கு புரிந்து கொண்டுள்ளதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளும் இணைந்து கூட்டாக யோசனைகளை முன்வைத்துள்ளதாக சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைக் கழகமான புளொட் கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், க.சிவநேசன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 13 அம்ச நிபந்தனைகள் குறித்து தர்மலிங்கம் சித்தார்த்தன் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயமாக தேர்தலில் போட்டியிடுவதனால் அவரை தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.