சிங்களக் குடியேற்றங்களை வடக்கில் விஸ்த்தரிக்க முதலீட்டாளர்களைத் தேடுகிறார் வடக்கு ஆளுநர்

பிரித்தானியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகரவிற்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று(22) முற்பகல் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

லண்டனுக்கு 4நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் அவர்கள் உயர்ஸ்தானிகர் அவர்களை நேற்று (21) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது வட மாகாணத்திற்கு பிரித்தானியாவின் முதலீட்டாளர்களை அழைத்து வருவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உதவ வேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, பிரித்தானியாவில் இருந்து முதலீட்டாளர்களைத் கொண்டுவருவதன் மூலம் வடக்கில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி அதனை சிங்களவர்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் பகிர்ந்து அளிப்பதன் மூலம் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களின் தாயகக் கோட்பாடுகளைச் சிதைக்கும் சிறீலங்கா அரசின் திட்டத்திற்கு ராகவன் வழிதேடுவதாகவே தமிழ் அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், சில அபகரிப்புக்கள், பௌத்த ஆலயங்களின் விரிவாக்கம் என்பனவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பாத அல்லது அது தொடர்பில் கருத்துக்களை கூட கூறமறுக்கும் ஆளுநர் முதலீட்டாளர்களைத் தேடுவது மிகவும் ஆபத்தானதாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.