விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் எனும் பொய்க்குற்றச்சாட்டு : மலேசியாவின் கைதுகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கண்டனம்

மலேசியாவின் ஆளும் அரச கூட்டணியின்  நெகெரி செம்பிலான், மெலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட மலேசிய ஜனநாயகச் செயற்கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது.

தேச பாதுகாப்பு சிறப்புச் சட்டம் எனும் சொஸ்மா பிரவின் கீழ் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் எனும் குற்றஞ்சாட்டின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009 மே மாதத்தில் ஆயுதங்களை மௌனித்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்துள்ளனர். பின்னராக தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் எவ்வித வன்முறை நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இதனை 2018 செப்டெம்பர் 19ல் வெளிவந்திருந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயுதப்போரின் ஓய்வுக்கு பின்னராக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களால், வன்செயல் எதுவும் நிகழவில்லை என்பது பலவல்லுனர்களது கருத்தாக உள்ளது.

மலேசியாவின் நலன்களுக்கு எதிராகவோ, மலேசியாவில் வன்முறை சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் எக்காலத்திலும் ஈடுபட்டதில்லை. மலேசிய நலன்கள் எதையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதும் இல்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை நினைவேந்தும் வகையில் 2018 நவம்பரில் வணக்க நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார் என்றே கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தமது தொடக்க காரணங்களை மலேசிய அதிகாரிகள் முன்வைத்திருந்தனர். மறைந்தோரை நினைவேந்துதல் என்பது அடிப்படை மனித உரிமை ஆகும் என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அமெரிக்காவில், 2010ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடுத்த சட்ட வழக்கொன்றில், ‘பொருண்மிய ஆதரவு’ தொடர்பான சட்டநெறி அரசிலமைப்பின்படி செல்லும் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதே, ஒரு குடிமகன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கோ அவ்வமைப்பின் அரசியல் குறிக்கோள்களை ஊக்கத்துடன் முன்னெடுத்து ஆதரிப்பதற்கோ சட்டத் தடை ஏதுமில்லை என்று தெளிவாக கூறி விட்டது.

கைது நடவடிக்கைக்கு வன்முறை அச்சுறுத்தல் தவிர வேறு காரணங்களும் உண்டு என்றால், அதற்கு கண்டனமும் அறச் சீற்றமும் எழும் என்று உணர்ந்து கொண்ட மலேசிய அதிகாரிகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பணம் அனுப்பியதற்குத் தங்களிடம் சான்று இருப்பதாகச் சொல்லி பிற்பாடு கைது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்றுள்ளனர். அவ்வாறாறு சொல்லப்பட்ட விடயங்களுக்கும் சாட்சியங்கள் மலேசிய அதிகாரிகளால் சமர்பிக்கப்படவில்லை.

இனம்சார், அரசியல்சார் பார்வைகளால் இந்தக் கைதுகள் நடந்திருப்பதாகவும் சில ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இனவாத அரசியலுக்கும் கட்சிசார் அரசியலுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என மலேசிய அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தங்களுக்கு மாண்பைச் சேர்த்த ஓர் பேரியக்கமாக  தமிழீழ விடுதலைப் புலிகளைத் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பார்க்கின்றார்கள்.  இன்றளவும் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் நாள் உலகெங்கும் பல்லாயிரம் தமிழர்கள் மாவீரர் நாள் கொண்டாடக் கூடுகின்றார்கள் என்ற உண்மையே இதற்குப் போதிய சான்றாகவுள்ளது. மலேசியாவில் நடந்துள்ள கைதுகள் இதை மாற்றி விடாது.

புதிய தொரு மலேசியாவை உருவாக்குவோம் என்ற தனது தேர்தல் விஞ்ஞாபன அறைகூவலுடன் மலேசியாவில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட இனங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு தேசமாக,  புதிய தொரு மலேசியாவை உருவாக்க வேண்டுகிறோம்.
கொடுஞ்சட்டமாக காணப்படுகின்ற சொஸ்மாவை தேர்தலுக்குப் பின் நீக்கம் செய்வதாக தற்போதைய ஆளும் கூட்டணி உறுதியளித்தது. ஆனால் இந்த உறுதியைக் காப்பாற்றவில்லை. தேசப் பாதுகாப்புக்கு ‘அச்சுறுத்தல்’ என்ற பெயரில் பலர் இச்சட்டம் பாய்கின்றது. காலவரையற்ற வகையில் தடுத்து வைப்பதற்கும் இச்சட்டம் வழி செய்கின்றது.  இரகசியச் சாட்சிகளை அனுமதிக்கவும் இச்சட்டம் இயலுகின்றது.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்ற பெயரில் குற்றஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுவதோடு, அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர்களை விடுவிக்கும்படியும் வலியுறுத்துகிறோம். காவல்துறையிடம் சான்று இருக்குமானால், கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் படி அவர்களைப் பிணையில் விடுவிக்கவும் வலியுறுத்துகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.