இலங்கையில் பா.ஜ.க.வை ஒருபோதும் ஏற்கமுடியாது – சிங்கள ராவய சீற்றம்

 

அரசியல் நோக்கங்களுடன் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி கிளையை ஸ்தாபிக்க முயற்சிக்கப்படுமாயின் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் அறிவிப்பு தொடர்பில் வினவிய போது அவர் மேலும் கூறியதாவது,

“இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசியல் நோக்கங்களுடன் இலங்கையில் அதன் கிளையொன்றை ஸ்தாபிக்க முடியாது. அதற்கு நாம் முழுமையான எதிர்ப்பை வெளியிடும் அதேவேளை, அத்தகைய செயல்பாடு இடம்பெறும் பட்சத்தில் நாட்டின் சுயாதீனத்தன்மையும், இறையாண்மையும் வெகுவாகப் பாதிப்படையும். எனவே இந்நாட்டின் பௌத்த பிக்குகள் என்ற அடிப்படையில் அதனை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

இலங்கையில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் முதலீடுகளைச் செய்கின்றன. அதேபோன்று அபிவிருத்தி செயல்திட்டங்களில் தமது பங்களிப்பை வழங்குகின்றன. எனினும் அந்நாட்டிலுள்ள கட்சியொன்றை இங்கு ஸ்தாபிப்பதற்கு அவை முற்படவில்லை. அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் அதனை எம்மால் அனுமதிக்கவும் முடியாது.

அதே போன்று இந்தியாவும் எமது நாட்டில் முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடமுடியும். எனினும் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்யும் நோக்கத்துடன் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதிபடத் தெரிவித்தார்.