இலங்கையின் நிலைமை மிக மோசம்: மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் – அரசிடம் ரணில்

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் மக்களின் சுகாதாரப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாகச் செயற்பட்டு, பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவசர வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் விசேட காணொலியொன்றை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலைவரம் நீடித்தால் ஜூன், ஜுலை மாதங்களில் நாளொன்றுக்கு 100 பேர் வரை உயிரிழக்கும் அவல நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனால், அமைச்சரபையும், ஜனாதிபதியும் அதிகாரங்களைத் தங்களின் கைகளுக்கு எடுத்துப் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும், இதற்கான அனுபவம் அமைச்சரவைக்கு இருக்கின்றது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

நாம் இன்று நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளோம். சுகாதாரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது.தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒட்சிசன் தட்டுப்பாடு இருக்கின்றது. வெண்டிலேட்டர் தட்டுப்பாடு இருக்கின்றது. மருத்துவமனைகளில் கட்டில்களுக்குத் தட்டுப்பாடு இருக்கின்றது. மருத்துவ மனைகள் நிறைந்து வழிகின்றன.

நாளுக்கு நாள் இந்தக் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. எனவே, நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி நாம் சரியான தீர்மானங்களை எடுக்காவிடின் நாம் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

அதேபோல், வொஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையயான்றின்படி, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் என்பதுடன் ஜூன், ஜூலை மாதங்களில் நாளொன்றுக்கு 100 பேர் மரணிக்கும் நிலை ஏற்படும். எனவே, இந்த நெருக்கடியான நிலையில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இது அரசின் பெயரைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம் அல்ல. இது அரசியல் போராட்டம் அல்ல. உண்மையில் இது மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் போராட்டம். அரசை மாற்றுமாறு கோரவில்லை. இந்த நாட்டின் அரசமைப்பின்படி அமைச்சரவைக்கே பொறுப்பு இருக்கின்றது. ஜனாதிபதியும், அமைச்சரவை அமைச்சர்களும் தங்களின் கைகளுக்கு அதிகாரங்களை எடுக்க வேண்டும்.

தற்போதுள்ள குழுக்கள் தோல்வியடைந்துள்ளன. இவை குறித்து ஏற்கனவே கூறியிருந்தோம். எனினும், எதனையும் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதிகாரங்களை அமைச்சரவையும் ஜனாதிபதியும் பொறுப்பேற்கவேண்டும். இந்த வாரமே எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சு நடத்துங்கள். அவர்களின் யோசனைகளையும், ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

அவர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். உடனடியாகச் செயற்பட வேண்டும். இல்லையயனில் பல உயிர்களை இழக்க நேரிடும். பொதுமக்கள் குறித்து அக்கறை இருக்குமாயின், அமைச்சரவை இதனைப் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு இது குறித்து அனுபவம் இருக்கின்றது. இதன்படி நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் விசேடமாக வேண்டுகோள் முன்வைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.