இந்திய மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் – அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த பயணத்தின்போது இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் குணவர்தனவுடனான சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை தணிக்க கடந்த பல மாதங்களாக இந்தியா அளித்த ஆதரவுக்கு, இலங்கை ஜனாதிபதி, இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பாக, இந்திய பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்த காலகட்டத்தில், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை, சுகாதாரத் துறை மற்றும் பொருளாதாரத்தில் சாதகமான நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்றுநோய் இரு நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. இதேபோல் கொரோனா காலத்திற்கு பிந்தைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை பெறுவதில் இலங்கை ஆர்வமாக உள்ளது.

வளர்ந்து வரும் கடல்சார் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையின் திறன்களை மேம்படுத்த இந்தியா தயாராக இருக்கிறது.

மீன்வளம் தொடர்பான இந்தியா- இலங்கை கூட்டு செயற்குழு சமீபத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தின்போது, நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட எங்கள் மீனவர்கள் (தமிழக மீனவர்கள்) விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். அவர்கள் விரைவில் நாடு திரும்புவதை எதிர்பார்க்கிறோம்.

இந்திய தொழில் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளன. மருந்து உற்பத்தி மற்றும் சுற்றுலாவுக்கான சிறப்பு மண்டலங்களைப் பற்றியும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்” என்றார்.