தமிழர்களுக்குத் தீர்வைப்  பெற்று கொடுக்க  வேண்டும் –இலங்கைக்கு இந்தியா அழுத்தம்

தமிழர்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் உள்ளடங்களாக தீர்வைப் பெற்றுக் கொடுப்பதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும் அரசியல் அமைப்பிற்கான 13ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவாக அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கடப்பாட்டையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இரு நாள் அரசுமுறைப் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தியா சார்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு,சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம், நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முன்வைத்துள்ள கருத்துக்களுக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்துள்ளார்.