இந்திய மீனவர்களின் இரட்டைமடி இழுவைப் படகுகளினால் அழிவடையும் வடக்கு கடல்வளம் : மு. மதிவாணன்

ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயுத மெளனிப்பின் பின், வடக்கில் நிலம் மற்றும் கடல்வளம் சூறையாடப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது! குறிப்பாக கடல்வளம் அந்நிய நாட்டு  மீனவர்களா லும் பிற மாவட்ட மீனவர்களாலும் சூறையாடப்படுவதும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளமையும் கண்கூடு.
இதனால் முல்லைத்தீவு தொடக்கம் மன்னார் வரை யான கரையோர வாழ் மீனவர்களின் வாழ்வாதாரம் தூக்கு மேடை ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் தூக்கு மேடையில் இன்னமும் குற்றுயிராய்த் துடித்துக் கொண்டே இருக்கின்றது.
இலங்கை – இந்திய மீனவர்களின் கடற்றொழில்  வாழ்வாதாரம் குற்றுயிராய் துடிக்கும் நிலையில் இருந்து மீட்க வேண்டியது  இலங்கை – இந்திய மத்திய அரசுகளின் பேச்சுக்களிலேயே தங்கியுள்ளது.
யுத்தம் இடம்பெற்று வந்த காலத்தில் இலங்கை கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும், கடற் படைக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வந்திருந்தது. இதன் காரணங்களால் அந்நிய சக்திகள் அல்லது வெளி நாட்டு மீன்பிடிப் படகுகள் (Sea of Srilanka) இலங்கைக்கே உரித்தான கடற்பரப்பினுள் அத்துமீற முடியவில்லை.
இக் காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத நடவடிக்கைகளோ அல்லது எல்லை தாண்டிய மீன் பிடியோ சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்பட்டது. இந்தப் பிரச்சினையின் வரலாறு, கொஞ்சம் நீண்டது. அதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம். பாக்கு நீரிணை மீன்பிடித் தொடர்பாக, இலங்கை-இந்திய மீனவர் களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த மோதல், இப்போது புதிய தளத்தை எட்டியுள்ளது.
இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் முடிவும் அண்மைய ஆட்சி மாற்றத்தின் பின்னரான கள நிலை மைகளும், இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியைப் புதிய பரிமாணத்துக்குக் கடத்தியுள்ளது. இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமும், மீன்பிடியும், வளங்களின் சூறையாடலும், தமிழக அரசியல் தலைமைகள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களது தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி முறையான இரட்டைமடி இழுவைப் படகுகளின் தொழில் முறையை மேற்கொள்ள மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது.
கவனிக்க வேண்டிய இன்னோர் அம்சம் யாதெனில், இந்தியப் பெருமுதலாளிகள் யார் என்று ஆராய்கின்ற போது தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பல மீனவர்களை பினாமிகளாக வைத்துக் கொண்டு குறித்த சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கும் விடயமாகவுள்ளது.
அத்துடன் வடக்கு – கிழக்கு தமிழ்த் தலைமைகள் இரு நாட்டு மீனவர்களுக்குடையிலான பிரச்சினையில் தலை போடுவதில் ஒரு மெத்தனப் போக்கையே கையா ண்டு வருகின்றனர். நேரடியாக இந்திய அரசையோ, இலங்கை மீனவர்களது வாழ்வாதார அழிப்பையோ அல்லது வடக்கு கடல் வள அழிவையோ தட்டிக் கேட்காமல்  மெளன மாக மௌனித்துப் பயணிக்கின்ற நிலையே நீடிக்கின்றது.
அதற்கான காரணங்களாக இரு விடயங்களை இங்கு கூறிக் கொள்ள முடியும்!
1) ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையை அயல் நாடான  இந்திய அரசே தீரத்து வைக்கும் என்கிற ஒரு  நம்பிக்கை.
2) இந்திய அரசுக்கு தமிழ்த் தலைமைகள் காட்டும் விசுவாசம் (வல்லரசை எதிர்க்க வேண்டாமே)
இரு நாட்டு மீனவர்களுக்கிடையே மூன்று அடிப்படைகள்  ஆராயப்படுகின்றது.
1:  இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப் பிரச்சினைக் குள்ளானது எவ்வாறு என்பதையும் அதன் காரணங் களையும், வரலாற்று நோக்கில் ஆராய்கிறது.
2: அங்கு நிகழும் ஒவ்வாத மீன்பிடிச் செயற்பாடுகள், எவ்வாறு கடல் வளத்தையும் நீண்டகாலத்தில் மீன் வளத்தையும் பாதிக்கின்றன என்பதையும் நோக்குகிறது.
3: பிரச்சினையின் பின்னால் உள்ள அரசியல் நலன்களை, குறிப்பாக இந்திய அரசின் பிராந்திய நலன்களும் இலங்கை அரசினதும் தமிழ் அரசியல் தலைமையினதும் மௌனம் இவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு மீன் வளத்தைப் பாதுகாக்க உகந்த காப்பு நடவடிக்கைகளையும் அவற்றின் சாத்தியங்களையும் ஆராய்கிறது.
இந்தியாவில் 1960களில் அறிமுகமான இழுவைப் படகுகள், புதிய மீன்பிடி முறையை அறிமுகப்படுத்தின. இது, “நீலப் புரட்சி” என அழைக்கப்பட்டது. சாதாரண மீன்பிடி முறைக்குப் பழக்கப்பட்டிருந்த மீனவர்க்கு, இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளும் பின்னர் தனியார் தொண்டு நிறுவனங்களும், கடன்களையும் உதவிகளையும் வழங்கி, இழுவைப் படகுகளின் பயன்பாட்டை ஊக்குவித்தன.  இதனால், மீன்பிடியில் பெருமுதலாளிகளின் பங்கு வலுத்ததுடன், சுயதொழிலாக மீன்பிடியை மேற்கொண்ட சாதாரண மீனவர்கள், நெருக்கடிகளை எதிர்நோக்கினர். காலப்போக்கில், அவர்கள் முதலாளிகளின் இழுவைப் படகுத் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கே அது வழிவகுத்தது.
1980க்கும் 1996க்கும் இடையில், தமிழ்நாட்டில் இழுவைப் படகுகளின் பாவனை பாரியளவு அதிகரித்தது. இக்காலப் பகுதியில், மீன்பிடியின் அளவு இருமடங்காகியது. அதனால், இழுவைப் படகுகளின் தொகை மேலும் அதிகரித் தது. தற்போதைய தரவுகளின்படி, தமிழ் நாட்டில் தற்போது 2,500 தொடக்கம் 3000 வரையான இழுவைப் படகுகள் உள்ளன. அவற்றில், பெரும்பாலான இழுவைப் படகுகள்  மீன்பிடிக்கு, இலங்கைக் கடற்பரப்பையே நம்பி இருக்கின்றன.
அதேவேளை, இலங்கையில் இழுவைப் படகுப் பாவனை, முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றும் உள்ளூர் இழுவைப் படகுகள் யாழ்ப்பாண மாவட்டத் தில் கரையூர் மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளில் சுமார் 500வரையான இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டே வருகின்றது. இந்த உள்ளூர் படகுகளினாலும் தமது வாழ் வாதாரம் அழிக்கப்படுவதாகவும், மீன் உற்பத்தியாகும் பவளப் பாறைகள், கடல் அடியில் உள்ள பாறைகள் அழிக்கப்பட்டு கடல்வளம் முற்றாக அழிக்கப்படுவதாகவும் உள்ளூர் மீனவ அமைப்புக்கள் தொடர்சியாக குரல் கொடுத்து வருகின்றன.
உள்ளூர் இழுவைப் படகுகளுக்கு சட்ட ரீதியாக அனுமதி  வழங்கப்படாத போதும், மாறி மாறி வரும் அரசாங் கம், அதன் மீன்பிடி அமைச்சர்கள் கையூட்டு களைப் பெற்றுக் கொண்டு அனுமதிகளை வழங்குவதாக மீனவ அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
ஆனாலும் இந்த உள்ளூர் இழுவைப் படகுகள் தொடர்பில் கடற்றொழில், நீரியல்வளத்துறை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வினவிய போது:- குறித்த உள்ளூர் இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு சில பல காரணங்களுக்காக  சில நிபந்தனை களுடன், நான் அமைச்சராக வருவதற்கு முன்னரே அனுமதி பெற்றுக் கொடுத்து இருந்தேன் என்றார்.
அவர் கூறிய காரணங்களாவன- 
1) யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக மாற்றுத் தொழிலுக்குச் செல்ல முடியாது.
2) அப்போதிருந்த பொருளாதார நிலை.
3) கொரோனா பெருந் தொற்று
4) பொருளாதார நெருக்கடி நிலையால் நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்தமை.
மேற்குறித்த காரணங்களால் உள்ளூர் இழுவைப் படகுகளில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தொடரும்….