யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் முன்மொழிவை அமெரிக்கா நிராகரிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், யுரேனியம் செறிவூட்டலுக்கு ஐந்தாண்டு காலத் தடை விதிக்க ஈரான் முன்மொழிந்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து, 20 ஆண்டு காலத் தடையைக் கோரியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ​​அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்காவும் ஈரானும் வெவ்வேறு முன்மொழிவுகளை வழங்கின, ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், ஓர் அமைதி ஒப்பந்தத்துக்கான சாத்தியம் இன்னும் உள்ளது என்பதையும், இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்பதையும் இந்த விவாதங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஈரானின் அணுசக்தி லட்சியங்களே இந்த சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணம் என்று அமெரிக்கா நம்புகிறது. ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்  மீண்டும் வலியுறுத்தினார்.