இந்தியா: தமிழகத்தில் ஏதிலியாக இருந்து நாடு திரும்பியவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு

இந்தியாவின் தமிழகத்தில் ஏதிலியாக பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த ஒருவர் நேற்று மீண்டும் இலங்கைக்கு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 75 வயதான அவர் பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (30) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையானார்.

இது தொடர்பில் தமது சமூக ஊடக பக்கங்களில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், குறித்த நபர் நாடு திரும்புவதற்கு தேவையான சகல ஆவணங்கள் இருந்த போதும், சர்வதேச சட்டத்தின்படி, ‘ஏதிலி’ என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவர் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் நாடு திரும்புவதற்கு தயாராக இருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அச்சமடைந்து வராமல் செய்வதற்கான ஏற்பாடுகளா? எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தமது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தமிழர்களை மீண்டும் நாடு திரும்புவதற்கு அழைப்பு விடுத்த அரசாங்கத்தை நம்பி, நாடு திரும்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் குறித்த நபருக்கு சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் ஊடாக கடவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விடயம் அரசாங்கத்துக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் குறித்த நபருக்கான பயணச் சீட்டை ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் அமைப்பே வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள்’.

ஆனால் தமிழக முகாமில் 30 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வயோதிபம் அடைந்த பின் நாடு திரும்பிய 75 வயதான நபர் விமான நிலையத்தில் வைத்து எதற்காக கைது செய்யப்பட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.