காணி வர்த்தமானி மீளப் பெறப்படுவதை எதிர்க்கும் சரத் வீரசேகர!

உரித்தற்ற காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெறுமானால், அது சமஷ்டியை மறைமுகமாக ஆதரிப்பதாக அமையும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமது கோரிக்கைக்கமைய, காணி வர்த்தமானியை இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதை ஊடகங்கள் மூலமாக அறியக்கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

‘காணி மீட்பு சட்டத்துக்கமைய, வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியின் ஊடாக, உரிமையாளர்கள் அல்லாத காணிகளையே பொறுப்பேற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது’. ‘இந்த செயற்பாடுகள் வடக்கில் மாத்திரமல்லாது தெற்கிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

‘நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் இத்தகைய திட்டத்திற்கு வடக்கிலிருந்து மாத்திரம் சுமந்திரன் போன்றவர்கள் எதிர்ப்பு வெளியிட்டு இவை தமது காணிகள் என்று கூச்சலிடுகின்றனர்’. ‘நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த அன்றிலிருந்து முயற்சிக்கும் இவ்வாறானவர்களின் கருத்தை கேட்டு அரசாங்கம் வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெறுமானால், அது சமஷ்டியை மறைமுகமாக ஆதரிக்கும் ஒரு செயற்பாடாகும்’ என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

‘வடக்கின் காணிகளை முழுமையாக அவர்களுக்கே தரைவார்ப்பது போன்றாகிவிடும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘அதேநேரம், இந்த வர்த்தமானி நல்லிணக்கத்துக்கு பாதிப்பு என்றும் சுமந்திரன் கூறுகிறார்’.

‘வடக்கிலிருந்து யுத்தகாலத்தில் விரட்டப்பட்ட, சிங்களவர்களும், முஸ்லிம்களும் அவர்களது காணிகளில் மீள குடியேற்றப்படுவதே உண்மையில் நல்லிணக்கமாகும்’ என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.