இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

பிரித்தானியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா, இந்தியாவில் 6 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உருமாறி அதிவேகமாக பரவி வரும் கொரோனாவால், டென்மார்க், சுவிடன், இத்தாலி ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயன், கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும், கொரோனா சோதனையை தீவிரப்படுத்தி, மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய உருமாறிய கொரோனா அச்சம் காரணமாக பிரிட்டனுடனான, விமான போக்குவரத்தை நிறுத்திய இந்தியா, பிரிட்டனில் இருந்து வந்தவர்களை கடுமையாக கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 25ம் திகதி முதல் டிசம்பர்., 23ம் திகதி வரை பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியது.

அதில் 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களில் 6 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து  அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

அதில் பிரித்தானியாவில்  இருந்து தமிழகம் வந்த 17 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபின் பாதிப்பு உள்ளது.

மேலும் குறித்த 6 பேருடன் விமானத்தில் வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.