நீதிமன்றம் நிராகரிப்பினும், உயிர்ப்புறும் ஒப்புதல் வாக்குமூலம் – பி.மாணிக்கவாசகம்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மிகமோசமான நிலைமைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது ஓர் எரியும் பிரச்சினை. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர்களுடனான விளையாட்டு. அதுவும் பூனைகளுக்குக் கொண்டாட்டம். எலிகளுக்குத் திண்டாட்டம் என்ற அரசியல் ரீதியான வலிகள் நிறைந்த விளையாட்டாக மாறியிருக்கின்றது. மாற்றப்பட்டிருக்கின்றது.

சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் நீதிமன்றச் செயற்பாடுகள் நத்தை வேகத்திலும் முக்கியமான தருணங்களில் சேற்றில் சிக்கிய வண்டியைப் போன்று சில்லெடுக்கும் விவகாரமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது.

உண்மையில் அரசியல் கைதிகளின் விடயமானது அரசியல் ரீதியாகக் கையாளப்பட வேண்டியது. அரசியல் ரீதியாக முடிவுறுத்தப்பட வேண்டியது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வு காண்கின்ற கட்டத்தை அது கடந்து பல வருடங்களாகின்றன. நீதிமன்றத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண்கின்ற நடவடிக்கையானது, வேண்டுமென்றே காலம் கடத்தி புறந்தள்ளுகின்ற வகையில் கையாளப்பட்டு வருகின்றது.

நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்ட நியதிகளே முதன்மை பெறுகின்றன. ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும், காலம் தாழ்த்தாமல் நீதிமன்றம் விதிக்கின்ற காலக் கெடுவுக்கமைய விசாரணைகள் நடைபெற வேண்டும். வழக்குத் தவணைகளுக்கான திகதிகள் வழக்காளி மற்றும் எதிர்த்தரப்பு சட்டவாதிகளின் வசதிக்கு ஏற்ற வகையில் நீதிமன்றம் தீர்மானிக்கின்றது. அந்தத் திகதிகளில் வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தவறாமல் நீதிமன்றத்திற்கு வருகை தர வேண்டியது அவசியம். அதேபோன்று வழக்குடன் தொடர்புடைய சாட்சிகளும் தவறாமல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். இது மிகவும் கண்டிப்பான நீதிமன்ற நடைமுறை.

சாதாரண வழக்குகளில் வழக்குத் தவணையின்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறினால் அவர்கள் கடிந்து கொள்ளப்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் தண்டனை வழங்கப்படுவதும் உண்டு. அது மட்டுமல்லாமல் அத்தகைய அக்கறையற்ற செயற்பாடுகளைப் பொறுக்காத நீதிமன்றம் அந்த வழக்குகளை விசாரணைகளில் இருந்து தள்ளுபடி செய்து விடுவதும் உண்டு.

ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்குகளில் அரச தரப்பு சட்டத்தரணிகள் அல்லது சட்டமா அதிபரின் பிரதிநிதிகள், வழக்கைத் தொடுத்த பொலிஸ் தரப்பினர் முன்னறிவித்தலின்றி வழக்குத் தவணை திகதிகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறுவது சாதாரண நிகழ்வாகக் காணப்படுகின்றது.

அரச தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இத்தகைய வழக்குகளில் எதிர்த்தரப்பினர் முன்னிலையாகத் தவறினால், நீதிமன்றத்தின் கோபத்திற்கும் வழக்காளிகளின் அதிருப்திக்கும் ஆளாக நேரிடும். ஆனால் அரச தரப்பாகிய வழக்குத் தொடுநர் தரப்பில் இவ்வாறு சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையாகத் தவறினால், அந்தத் தருணத்தில் தெரிவிக்கப்படுகின்ற காரணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை வேறொரு திகதிக்கு ஒத்தி வைத்து வருகின்றது.

வழக்கு விசாரணைகளைத் துரிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ சாதாரண வழக்குகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒழுங்குமுறைச் செயற்பாடுகள், பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்குகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதுவே பாதிப்புக்கு உள்ளாகிய அரசியல் கைதிகளின் கசப்பான அனுபவம்.

ஒப்புதல் வாக்குமூலம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளிடமிருந்து பெறப்படுகின்ற வாக்குமூலங்கள், குற்றம் செய்ததை வழக்குகளில் ஒப்புக்கொள்கின்ற முக்கிய சாட்சியமாக நீதிமன்றங்களினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒருசில வழக்குகளில் ஒருசில மேல் நீதிமன்றங்களில் மாத்திரமே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது. அநேகமான வழக்குகளில் இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பாதிக்கப்பட்டவரினால் அச்சுறுத்தலற்ற நிலையில், சுயவிருப்பத்தின்பேரில் அளிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்படுவதில்லை.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற சந்தேக நபர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அந்தத் தருணங்களில் அச்சுறுத்தல்களுக்கும் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கும் உளநெருக்கீடுகளுக்கும் கைதிகள் உள்ளாகின்றார்கள்.

தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தமட்டில், விசாரணையாளர்கள் விரும்புகின்ற விடயங்களை அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சாட்சியமாகக் கூறியதாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இத்தகைய வழக்குகளில் ‘தவளை தன் வாயால் கெட்டது’ போன்ற அவல நிலைமைக்கு இந்தக் கைதிகள் ஆளாகின்றார்கள். அதனடிப்படையில் பலரும் தண்டிக்கப்படுகின்றார்கள்.

சில வழக்குகளில் இந்த ஒப்புதல் வாக்குமூலம் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற தருணங்களில், நீதிமன்றங்கள் அந்த சாட்சியங்களில் உள்ள ஓட்டைகளைக் கவனத்திற் கொண்டு, அந்த சாட்சியத்தை நிராகரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததும் உண்டு. இல்லையென்று கூற முடியாது. ஆனால் பெரும்பாலான வழக்குகளில் ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிகின்ற இந்த நடவடிக்கை இடம்பெறுவதில்லை என்பதும் அரசியல் கைதிகளின் அனுபவமாக உள்ளது.

ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கைதி ஒருவருக்கு எதிரான வழக்கில் செல்லுபடியற்றது என்று  நீதிமன்றம் ஒன்றில் தீர்ப்பளிக்கும்போது, அத்துடன் அதன் வலிமை அற்றுப் போவதில்லை. அல்லது செல்லுபடித்தன்மை முற்றுப் பெறுவதில்லை. நீதிமன்றம் நிராகரித்த பின்பும் ஒப்புதல் வாக்குமூலம் வேறொரு நீதிமன்றத்தில் உயிர் பெறுகின்ற சட்ட முரணான நிலைமையே காணப்படுகின்றது.

ஒரு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட அதே ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி அதில் அடங்கியுள்ள வேறு ஏதேனும் விடயங்களைச் சுட்டிக்காட்டி வேறு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்ற நடைமுறையும் நீதித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் உச்சக்கட்ட மோசமான பயன்பாடுகளில் ஒன்றாகும். நீதி நடைமுறையில் அதனை மோசடியான பயன்பாடு என குறிப்பிட்டாலும் தகும்.

மனிதாபிமானம் முதன்மை பெறுவதில்லை

பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்குகள் உண்மையில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான நியமங்களைச் சார்ந்தவைகளாக இருக்கின்றன. ஏனெனில் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பதே பயங்கரமானது. மோசமான விதிமுறைகளைக் கொண்டது. அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் வகையில் அந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயங்கரவாதத் தடைச் சட்ட சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குத் தாக்கல் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுவதைப் போலவே, ஒரு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர்களுக்கு எதிராக வேறு நீதிமன்றங்களிலும் வேறு வேறு காரணங்களைக் குறிப்பிட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

Capture 22 நீதிமன்றம் நிராகரிப்பினும், உயிர்ப்புறும் ஒப்புதல் வாக்குமூலம் - பி.மாணிக்கவாசகம்

உதாரணமாக ஒருவர் ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அவர் விடுதலைப்புலிகளிடம் பயங்கரவாதச் செயல்களுக்கான ஆயுப் பயிற்சி பெற்றார் என குற்றம் சுமத்தி வேறு ஒரு நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விடுகின்றது. இதனால் ஒரு வழக்கில் விடுதலையாகின்ற அரசியல் கைதி ஒருவர் வேறு வேறு வழக்கு விசாரணைகளுக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றார்.

வழக்குகளில் மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் என்ற அடிப்படையில் நீதிமன்றங்களில் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்குகள் தவணை இடப்படுகின்றன. இதனால் வழக்குகள் வருடக்கணக்கில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. விசாரணைகளும் துரிதப்படுத்தப்படுவதில்லை. அதேவேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொள்கின்ற நிலைமைகளுக்கும் அரசியல் கைதிகள் ஆளாக்கப்படுகின்றார்கள். இந்த காரணங்களினால் அந்தக் கைதிகளின் நீட்சியான சிறைவாசம் நியாயப்படுத்தப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முற்றுப் பெறாமலும், வழக்குத் தாக்கல் செய்யப்படாமலும் பல கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தத் தடுப்புக்காவலினால் அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளில் நீதிமன்றத் தீர்ப்புக்கள் இல்லாமலேயே வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் மூலம் நீண்ட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேர்ந்திருக்கின்றது. உண்மையில் அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்செயல்களுக்கு வழங்கப்படுகின்ற சிறைத்தண்டனையும், உள நெருக்கீட்டுத் தண்டனையும் ஒப்பீட்டளவில் இந்தத் தடுப்புக் காவல் தண்டனையை விட குறைவானதாகவே இருக்கும்.

அத்துடன் நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற கைதிகளுக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும்போது அந்த நீண்ட தடுப்புக்காவல் காலம் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. மாறாக குற்றச் செயல்களுக்கு ஏற்ற முறையான சிறைத்தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டிய நிலைமைக்கே அவர்கள்  ஆளாக்கப்படுகின்றார்கள். இந்தத் தீர்ப்புக்களில் அல்லது வழக்குகளின் முடிவின்போது சட்ட வரையறைகளே தொழில்நுட்ப ரீதியில் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. அங்கு நியாயமோ அல்லது மனிதாபிமானமோ முதன்மை பெறுவதில்லை.

இத்தகைய ஒரு பின்புலத்திலேயே தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை அரசியல் கைதிகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசாங்கத்தின் பிடிவாதப் போக்கும் இவர்களின் நீண்ட சிறைத்தடுப்புக்கு முக்கிய காரணமாகின்றது.

கொரோனாவின் கொடிய கரங்கள் சிறைச்சாலைகளையும் விட்டு வைக்காத சிக்கலான நிலைமைகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றதாகவே மாறியிருக்கின்றது.