பொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தில் மகோற்சவ கிரியைகளை நடத்திய அர்ச்சகர்களும் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களும் ஆலயத்திலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும், தேர், தீர்த்த உற்சவ உபயகாரர்கள், மகோற்சவ ஆரம்பம் தொடக்கம் முடிவடையும் வரை தொடர்ந்து ஆலயத்திற்கு வருகைதந்தவர்கள், தீர்த்தோற்சவத்தின் போது கடலில் மிக நெருக்கமாக நின்றவர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலுக்கு அமைய சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பொ.யசிதரனின் வழிப்படுத்தலில் பொன்னாலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ச.சர்மிலன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு செயலணியால், ஆலயத் திருவிழாக்களின்போது 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களின் பெயர்கள் நுழைவாயிலில் வைத்து பதிவுசெய்யப்பட்டு 50 பேர் மட்டும் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பக்தர்களுக்கு தொற்றுநீக்கல் திரவம் வழங்கப்பட்டது. முகக்கவசம் இல்லாதவர்களுக்கு ஆலய பரிபாலன சபை அவற்றை வழங்கியிருந்தது. ஆலய வளாகத்திலும் முகப்பிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பனர்கள் கட்டப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்தன.

எனினும், திருவடிநிலை புனித தீர்தக்கரையில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்தின் போது ஆலயத்திற்கு வருகைதராமலேயே வேறு மார்க்கங்களால் பக்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.

ஏற்கனவே கடலுக்கு சென்று நீராடிக்கொண்டிருந்த பலர் சுவாமி தீர்த்தமாடச் சென்றபோது திடீரென அங்கு சென்று சுவாமியை சுற்றிநின்று வழிபட்டனர். அந்தப்
புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இதனால், ஆலய மகோற்சவத்தின் போது சமூக இடைவெளி பேணப்படவில்லை மற்றும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என கொரோனா தடுப்பு செயலணிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முறைப்பாடு செய்திருந்ததாக தெரியவருகின்றது.

இதைத் தொடர்ந்து ஆலயத்தை தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுகாதாரத்துறையினரின் நடவடிக்கைகளுக்கு தாம் உரிய ஒத்துழைப்பை வழங்குவார்கள் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.