இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- உலக நாடுகள் உதவி

கொரோனா இரண்டாவது அலையால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் இந்திய மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன் வந்துள்ளன.

அதே நேரம் ஒடிஷா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களில் ஓக்சிஜன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 உயர்ந்துள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு ஆதரவாக சீனா இருக்கும் என இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஹொங்காங்கில் இருந்து டெல்லிக்கு 10 ஆயிரம் ஓக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அடுத்த 7 நாள்களில் வழங்கப் போவதாகவும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

வரும் நாள்களில் ஓக்சிஜன் வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து அத்தியாவசிய மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் கூடிய விரைவில் அனுப்ப இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

300 ஓக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், 600 மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்தியாவின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏங்கலா மெர்கல் அவசரகால உதவிகளை வழங்கப் போவதாகக் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் அரசு 250 ஓக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரக அரசு இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வைத்திருக்கிறது. அத்தோடு செளதி அரேபிய அரசு இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களையும் 80 டன் ஆக்சிஜனையும் அனுப்பி வைத்திருக்கிறது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிப்பதற்குத் தேவையான பொருள்களை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியாவுக்கு உதவி செய்வதில் உறுதியாக இருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.