`இந்தியாவில் அக்டோபரில் கொரோனா 3ம் அலை` கருத்துக்கணிப்பில் தகவல்

கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலையில்  சிக்கிய இந்தியா தற்போதுதான் மெதுவாக மீண்டு கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களும் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், “மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை  இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம்” என  எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரஞ்சித் குலேரியா எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், இந்த மூன்றாம் அலை இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம்   ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்களிடம் ராயட்டர்ஸ் செய்தி முகமையால் எடுக்கப் பட்ட கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

அடுத்த வருடம் வரை கொரோனா பெருந்தொற்று என்பது பொது சுகாதாரத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக முழுவதும் உள்ள 40 சுகாதாரத் துறை நிபுணர்கள், மருத்துவகள், விஞ்ஞானிகள், வைரலாஜிஸ்ட், தொற்று நோய் நிபுணர்கள், பேராசிரியர்கள் ஆகியோரிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.

இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 85 சதவீதம் பேர்  அடுத்த அலை அக்டோபர் மாதம் வரும் என்றும், மீதி மூன்று பேர் ஆகஸ்டு மாதமே வர வாய்ப்பு உள்ளது என்றும், 12 பேர் செப்டம்பர் என்றும், மீது மூன்று பேர் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர்  இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாம் அலை நன்றாக கையாளப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால்  இது வரையில் 2,98,23,546  பேர் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரம், கொரோனா உயிரிழப்புகள் 3,85,137 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.