இந்தியாவின் புகழ் பெற்ற நகைச் சுவை நடிகர் விவேக் காலாமானார்

இந்தியாவின் நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.

முன்னதாக,  கடந்த வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அப்போது அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது விவேக் மயங்கி விழுந்தார் என்றும், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும், பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து  நடிகர் விவேக்கின் உடல்நிலை தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வரும் சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயகுமார் சொக்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாரடைப்பு அதிர்ச்சியுடன் கூடிய இதய குறைபாடு பிரச்னை. இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தினாலும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிங்க - நடிகர்  விவேக் | Make sure that after you get the corona vaccine the rules must be  followed - Actor Vivek - Tamil ...

இதற்கிடையே, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில், “ஒரு வாரத்திற்கு முன்பே விவேக் தானாகவே தடுப்பூசி போட வருகிறேன் என்று கேட்டிருந்தார். அவர் போட்டுக்கொண்டால் அதனை பார்த்து பலர் தடுப்பூசி போடுவதற்கு முன்வருவார்கள் என்று கூறி அவரே வருகை தந்திருந்தார். மத்திய அரசின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இதய கோளாறு, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் விவேக்கின் நிலைமை எங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் உள்ளது. எனினும், இதற்கும் தடுப்பூசி போட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை, விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் மட்டும் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,  இரத்தக்குழாயில் ஒரே நாளில் அடைப்பு ஏற்படாது. இணை நோய் உள்ளவர்களும் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும், விவேக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும் நூறு சதவீதம் தொடர்பில்லை,”என்றார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடிகர் விவேக் காலமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய மரணச்செய்தி கேட்டு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை ஐந்து மணியளவில்  அவருடைய இறுதி நிகழ்வு நடைபெறும்  என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பாலச்சந்தருடன் நடிகர் விவேக்

சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக்கின் சில தகவல்கள்…

நகைச்சுவை நடிகர் விவேக் 1987ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் இயக்குநர் பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர்

கோவில்பட்டியில் பிறந்த இவர், படிப்பு மற்றும் வேலை காரணமாக சென்னைக்கு குடியேறினார்.

1980களில் நடிக்க தொடங்கியிருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கென நகைச்சுவை பணியில் மாற்றங்களை செய்து, தலைமுறைகளை கடந்தும் மக்களின் மனங்களில் இடம்பெற்றவர்.

ஆரம்பகட்டத்தில் ஒரு சில நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே தோன்றிய அவர், 1990களில் பல படங்களில் கதாநாயகனின் நண்பனாக, கதையில் வலுவான முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நகைச்சுவை மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துகளை பேசியவர். மூடநம்பிக்கை, மக்கள் தொகை பெருக்கம், ஊழல், லஞ்சம், பெண் சிசுக்கொலை, பெண் கல்வி, வறுமையில் வாடும் நகரவாசிகளின் வாழ்க்கை என பலவிதமான விஷயங்களை நகைச்சுவை வாயிலாக மக்களுக்கு கொண்டுசென்றார்.

புதுப்புது அர்த்தங்கள், ரன், மின்னலே, நம்ம வீட்டுக் கல்யாணம், தூள் உள்ளிட்ட பல படங்களில் விவேக்கின் நகைச்சுவை நடிப்பு பாணி மிகவும் பிரபலமானது.

தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான்கு முறைபெற்றுள்ளார் .

மேலும், 2009ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.