வட அயர்லாந்தில் அமைதியின்மை: வன்முறை வெடித்ததற்கான காரணம் என்ன? – தமிழில் ஜெயந்திரன்

தொடர்ச்சியாக ஆறு இரவுகளாக நடைபெற்ற கலவரங்கள் வட அயர்லாந்தை அதிர வைத்திருக்கின்றன. பல வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற இவ்வாறான கலவரங்களில் 55 காவல்துறைப் பணியாளர்கள் காயப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் வடஅயர்லாந்தில் தற்போது என்ன நடக்கிறது?

கிறிஸ்தவர்களின் புனித நாளாகிய பெரிய வெள்ளி தினத்தில் தொடங்கிய இக்கலவரங்கள், ஐக்கிய இராச்சியத்துக்கு விசுவாசமான அங்கிளிக்கன் கிறிஸ்தவ பிரிவைச் சார்ந்த மக்கள் அதிகமாக வாழ்கின்ற டெறி (Derry), பெல்பாஸ்ட் (Belfast), அன்ட்ரிம் (Antrim) பிரதேசத்தைச் சார்ந்த நகரங்கள் போன்ற நகரங்களுக்குப் பரவியிருக்கின்றன.

மகிழூர்திகள் பல எரிக்கப்பட்டதுடன் பெற்றோல் குண்டுகள், கற்கள் போன்ற கட்டடப் பொருட்கள் எறியப்பட்டதன் காரணமாக பெல்பாஸ்ட்டில் இதுவரை காணாத மிக மோசமான கலவரங்கள் நடைபெற்ற புதன்கிழமை இரவு காயப்பட்ட எழுவர் உட்பட 48 காவல்துறை உறுப்பினர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

“காவல்துறைப் பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அதிர்ச்சி தருவனவாக அமைந்திருக்கின்றன” என்று வடஅயர்லாந்தின் காவல்துறை ஆணையம் தெரிவித்திருக்கும் அதே நேரம், “நடைபெற்ற நிகழ்வுகள் கண்டிக்கப்படவேண்டியவை” என்று வட அயர்லாந்தின் நிறைவேற்று அதிகாரக்குழு கூறியிருக்கிறது.

பிரித்தானியாவுக்கு விசுவாசமான சனநாயக ஒன்றியக் கட்சியின் (Democratic Unionsit Party) தலைவரும், நாட்டின் தலைமை அமைச்சருமான ஆளீன் பொஸ்ரர் (Arlene Foster) ஓடிக்கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது எரிகுண்டுகள் எறியப்பட்ட விவகாரத்தை மிகவும் கடுமையாகக் கண்டித்திருப்பதோடு, “நடைபெற்ற குழப்பங்கள் சமூகத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்றன” என்றும் தெரிவித்திருக்கிறார்.

“உண்மையில் இது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமே அல்ல. இது வேண்டுமென்றே அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்பது மட்டுமன்றி கொலைமுயற்சியாகவும் பார்க்கப்படக்கூடியது. எமது ஒன்றியக் கொள்கையையோ, விசுவாசத்தன்மையையோ இவை எந்தவிதத்திலும் பிரதிபலிக்கவில்லை” என்று தனது ருவிற்றர் செய்திக்குறிப்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐக்கிய இராச்சியத்துக்குச் சார்பான அங்கிளிக்கன் சமூகங்களும் அயர்லாந்துக் குடியரசுக்குச் சார்பான கத்தோலிக் சமூகங்களும் வதிகின்ற வாழ்விடங்களைப் புவியியல் ரீதியாக இணைக்கின்ற ‘அமைதிச்சுவர்’ அமைந்திருக்கின்ற ஷாங்கில் (Shankill) ஸ்பிறிங்பீல்ட் (Springfield) பகுதிகளில், புதன்கிழமை இரவு ரயர்களும் குப்பைவாளிகளும் எரியூட்டப்பட்டதைத் தொடர்ந்து எதிர்ப்புக் கலவரங்கள் ஆரம்பமாகின. அந்த இரவில் கலவரங்கள் தீவிரமாகியதோடு ஒரு பேருந்தின் சாரதி அதனை விட்டு வெளியேற முயற்சித்துக் கொண்டிருந்த தருணத்தில் அதன் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டதுடன் ‘பெல்பாஸ்ட் ரெலிகிராப்’ (Belfast Telegraph) என்ற நாளிதழின் ஒளிப்படவியலாளரும் தாக்கப்பட்டிருக்கிறார்.

மேற்குறிப்பிட்ட ஷாங்கில் மற்றும் ஸ்பிறிங்பீல்ட் நகரங்களில் இரு சமூகங்களினதும் வாழ்விடங்ளையும் இணைக்கின்ற வாயிற்கதவுகளுக்கு அண்மையில் கிட்டத்தட்ட 600 பேர் ஒன்று கூடியதாகவும் கூட்டங்களைக் கலைப்பதற்காகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் 6 பிளாஸ்ரிக் ரவைகள் புதன்கிழமை இரவு தங்களால் பயன்படுத்தப்பட்டதாகவும், காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

அச்சந்தர்ப்பத்தில் 8 காவல்துறை உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும் கலவரத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 28 வயதும் 18 வயதும் கொண்ட இரு ஆண்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இக்கலவரங்களில் ஈடுபடுபவர்கள் யார்?

8fd00d74 5a1e 4357 91e7 32d1c72c9cbb வட அயர்லாந்தில் அமைதியின்மை: வன்முறை வெடித்ததற்கான காரணம் என்ன? - தமிழில் ஜெயந்திரன்

நடைபெற்ற வன்முறைகள் முதன்மையாக, ஐக்கிய இராச்சியத்துக்கு விசுவாசமான மக்கள் அதிகம் வாழ்கின்ற டெறி (Derry), கரிக்பேர்கஸ் (Carrickfergus), நியூட்டன்அபி (Newtonabbey) போன்ற கடலை அண்மித்த பகுதிகளிலும் தலைநகரமான பெல்பாஸ்ற் நகர மையத்தில் அமைந்துள்ள ஷாங்கில் பகுதியிலுமே அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன.

இதுவரை கலவரங்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 20, 30, 40 என சிறிய எண்ணிக்கையாகவே இருந்திருக்கிறது. ஆனால் கலவரங்கள் இடைவெளியின்றித் தொடர்ந்து நடைபெறுவதும், புதன்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களின் தீவிரத்தன்மையும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இக்கலவரங்களில் 12 வயது போன்ற ஆகக் குறைந்த வயதுள்ள சிறுவர்களின் பங்களிப்பு பலரை ஆழமாகக் கவலையடையச் செய்திருக்கிறது. இதன் காரணமாக திரைமறைவில் இருந்துகொண்டு யாரோ இதனை நெறிப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் உருவாகியிருக்கிறது.

இக்கலவரங்களின் பின்னணி என்ன?

6be5c8f5 30f2 44cc b759 385e753bf7d7 வட அயர்லாந்தில் அமைதியின்மை: வன்முறை வெடித்ததற்கான காரணம் என்ன? - தமிழில் ஜெயந்திரன்

ஜனவரி மாதத்தில் எல்லைகளில் பிரெக்சிற் சோதனைகள் தொடங்கப்பட்ட பின்னர், பிரச்சினைகள் தீவிரமடையத் தொடங்கின. ஐக்கிய இராச்சியத்தின் நான்கு நாடுகளில் ஒன்றாக விளங்கும் வடஅயர்லாந்தின் அரசியலமைப்பின் நிலை அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பிரெக்சிற் தீர்வின் காரணமாக ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய இராச்சியத்துக்கு விசுவாசமான ஒன்றியக் கொள்கைக்கு ஆதரவான மக்கள் அஞ்சுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு ஆதரவாக இக்குறிப்பிட்ட பிரதேசம் வாக்களித்ததோடு, டியுபி கட்சி (DUP) பிரெக்சிற்றுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. இவ்விடயத்தில் இக்குறிப்பிட்ட கட்சியின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படாமல் வெஸ்ற்மினிஸ்டர் அதிகாரம் தமது கருத்துக்களை அவர்கள் மேல் திணித்தாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தினுள்ளே வடஅயர்லாந்தின் இடத்தை பிரெக்சிற் வலுப்படுத்தும் என்று இந்தக் கட்சி கருதிய அதேவேளை, பொறிஸ் ஜோண்சனுக்கும் பிரஸ்சல்சுக்குமிடையே வரையப்பட்ட கடுமையான பிரெக்சிற் வரைபில் (hard brexit) ஐக்கிய இராச்சியத்தின் இறைமையை மையப்படுத்தும் விடயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது உணரப்பட்டிருக்கிறது.

தற்போது வட அயர்லாந்து தொடர்பாக வரையப்பட்ட சட்டங்கள் காரணமாக பிரித்தானியாவிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்கள் சோதனையிடப்படுவதே குழப்பங்கள் உருவாகுவதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இப்புதிய நடைமுறை ஐக்கிய இராச்சியத்தினுள் வடஅயர்லாந்தின் வகிபாகம் தொடர்பாகச் சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது.

வேறு ஏதாவது விடயங்கள் வன்முறையைப் பற்ற வைத்திருக்கிறதா?

e9a6b4b4 ef1f 4b14 960e d8c037e02990 வட அயர்லாந்தில் அமைதியின்மை: வன்முறை வெடித்ததற்கான காரணம் என்ன? - தமிழில் ஜெயந்திரன்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் அயர்லாந்துக் குடியரசு தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருக்கின்ற படியால் அயர்லாந்து தீவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வழமை போல் பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. குறிப்பாக பிரித்தானியாவிலிருந்து வட அயர்லாந்துக்குப் பொருட்கள் கொண்டுவரப்படும் போது அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிச்சந்தைக்குள் வடஅயர்லாந்து வழியாக உள்வாங்கப்படுவதன் காரணத்தினால் பிரித்தானியாவிலிருந்து வட அயர்லாந்துக்குக் கொண்டுவரப்படும் பொருட்கள் (குறிப்பாக உணவுப் பொருட்கள்) எல்லைப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு அமைவாகச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய ஒழுங்குகள் ‘வடஅயர்லாந்து நெறிமுறைகள்’  (Northern Ireland Protocol)  என்று அழைக்கப்படுகின்றன. இப்புதிய நடைமுறை நீக்கப்படவேண்டும் என்று சனநாய ஒன்றியக்கட்சி ஒரு உத்தியோகபூர்வ பரப்புரையை ஆரம்பித்தது. ஆனால் ஐக்கிய இராச்சியத்துக்கு ஆதரவான பிரதேசங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக காவல்துறையால் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கான எதிர்விளைவாகவே இவ்வன்செயல்கள் நோக்கப்படவேண்டும் என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள்.

ஓர் இறுக்கமான பிரெக்சிற் தீர்வு வட அயர்லாந்தில் தோற்றுவிக்கக்கூடிய பின்விளைவுகள் தொடர்பாக பொறிஸ் ஜோண்சன் வெளிப்படுத்திய நேர்மையின்மையே பிரித்தானியாவிலிருந்து வடஅயர்லாந்துக்குக் கொண்டுவரப்படும் பொருட்கள் சோதனை செய்யப்படமாட்டாது என முன்னர் நம்பிய ஒன்றியக் கொள்கையினரின் கோபத்துக்குக் காரணம் என வடஅயர்லாந்தின் நீதி அமைச்சரான நயோமி லோங் (Naomi Long) சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிரெக்சிற் ஜனவரி மாதத்தில் நடைபெற்றிருக்கும் பட்சத்தில் வன்முறைகள் தற்போது இடம்பெறுவதற்கான காரணங்கள் எவை?

பிரெக்சிற் தொடர்பாக பிரித்தானியாவின் மீதான கோப உணர்வு பல மாதங்களாகவே புகைந்துகொண்டிருந்த போதிலும் கொரோணா முடக்கம் தொடர்பான ஒழுங்குகளுக்கு முரணாக அயர்லாந்துக் குடியரசை ஆதரிக்கின்ற சின்பெயின் (Sinn Fein) கட்சியினர் அக்குறிப்பிட்ட கட்சியின் முன்னணி அரசியல்வாதி ஒருவரின் அடக்கச்சடங்குக்கு சென்றது தொடர்பாக வடஅயர்லாந்தின் சட்ட அமுலாக்கத்துக்குப் பொறுப்பானவர்கள் அவர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காத விடயமே வன்முறைகளைத் தூண்டியிருக்கிறது என நம்பப்படுகிறது.

இக்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக பணியை விட்டு விலகுமாறு காவல்துறைத் தலைவர் மீது நீதியமைச்சர் தொடர்ந்து அழுத்தத்தைப் பிரயோகித்து வந்திருக்கிறார். ஒரு வாரகாலமாகத் தொடர்ந்த இவ்வன்முறைகளுக்குப் பின்னர், சட்டத்தை மீறியவர்கள் மீது சட்டம் முழுமையாகப் பிரயோகிக்கப்படவேண்டும் என நீதியமைச்சர் பொஸ்ரர் அவருக்குக் கூறியிருக்கிறார்.

இக்கலவரங்களுடன் தொடர்புபட்டவர்கள் யார்?

குற்றச்செயல் குழுக்கள் மற்றும் போதைப்பொருட் குழுக்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து அக்குழுக்களின் பின்னாலுள்ள துணை இராணுவக் குழுக்களே இந்த வன்முறைகளுக்குக் காரணம் எனப் பலர் நம்புகிறார்கள். பெல்பாஸ்ட் நகரத்தின் அமைதி வாயிலில் புதன்கிழமை ஒழுங்குசெய்யப்பட்ட ஒன்றுகூடல் சமூக வலைத்தளங்களின் உதவியோடு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

அரசியல்வாதிகள் சொல்வது என்ன?

அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இந்த வன்முறையைக் கண்டித்திருக்கும் அதேவேளை, வெஸ்ட்மினிஸ்ரர் அதிகாரம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. புதன்கிழமை இரவு பேருந்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பொறிஸ் ஜோண்சன் முதற்தடவையாக இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினர் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

“புதன்கிழமை இரவு நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான ‘அதிர்ச்சியூட்டும் காட்சிகள்’ எமது சமூகத்தைப் பல ஆண்டுகள் பின்தள்ளக்கூடிய ஆபத்து இருக்கிறது” என்று வடஅயர்லாந்தின் காவல்துறைச் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது. அப்படிப்பட்ட காட்சிகள் வரலாற்றிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்புகளையும் சேர்ந்த தலைவர்கள் வன்முறைகளை விரைவாக ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விரைவாகப் பணியாற்ற வேண்டும் என்று மேற்படி சம்மேளனம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. “மோதல்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த இருமடங்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சமூகங்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையேயும் பேச்சுவார்த்தைகள் வடஅயர்லாந்தின் காவல்துறையின் அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும்” என்றும் காவல்துறை ஆணையத்தின் தலைவரான டக் கரெற் (Doug Garrett) குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக மோசமாக நடைபெறக்கூடியது எது?

வட அயர்லாந்தின் வரலாற்றில் கடந்த காலத்தில் இடம்பெற்றது போன்ற வன்முறைகள் மீண்டும் இடம்பெறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தற்போதைய வன்முறைகள் முளையிலேயே கிள்ளியெறியப்படாவிட்டால் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒழுங்கமைப்பில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் வடஅயர்லாந்தின் பிரச்சினைக்கு வழங்கப்பட்ட அரசியல் தீர்வைப் பாதிப்புக்கு உள்ளாக்கலாம் எனப் பலர் கவலைப்படுகிறார்கள்.

தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் எவை?

நடைபெறும் வன்முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் நிறைவேற்று அதிகாரக் குழுவில் அங்கம் வகிக்கின்ற ஐந்து அரசியற் கட்சிகளின் தலைவர்களுடனும் அதன் செயலரான பிரண்டன் லூயிஸ் (Brandon Lewis) சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

போறிஸ் ஜோண்சனுக்கும் அயர்லாந்தின் தலைமை அமைச்சரான மைக்கல் மாட்டீனுக்கும் இடையே ஓர் உச்சி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ‘வடஅயர்லாந்து நெறிமுறைகள்’ முற்றாகவே நீக்கப்படவேண்டும் எனப் பரப்புரை செய்து வரும் சனநாயக ஒன்றியக் கட்சியினரை எப்படிச் சமாளிப்பது என்பதும் இந்தக் கலவரங்களின் பின்னணியிலுள்ள கடும்போக்கு ஒன்றியக் கொள்கையாளர்களை எப்படிக் கையாள்வது என்பதுமே தற்போதுள்ள மிகக் கடுமையான அரசியல் சவால்களாகும்.

மாட்டீனும் வடஅயர்லாந்தின் நிழற் செயலரான லூயிஸ் ஹெய்யும் (Louise Haigh) அரசுகளுக்கிடையே அவசர சந்திப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். “இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பு சார்ந்த அரசியலே உகந்த வழியாகும்” என்று ஹெய் தெரிவித்திருக்கிறார்.

பின்வரும் பகுதியைக் கட்டம் கட்டிப் போடுங்கள்

ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற வட அயர்லாந்தில் இரு முக்கிய கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வதிகிறார்கள். இம்மக்களில் ஒரு பகுதியினர் இங்கிலாந்தின் முக்கிய மறையான அங்கிளிக்கன் மறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து வாழ விரும்புபவர்கள். இவர்கள் ஒன்றியக் கொள்கையாளர்  (unionists) அல்லது விசுவாசமானவர்கள் (loyalists) என அழைக்கப்படுகிறார்கள். வடஅயர்லாந்தின் மற்றைய கிறிஸ்தவ பிரிவினர் கத்தோலிக்க மறையைச் சார்ந்தவர்கள். இவர்கள் கத்தோலிக்க நாடான அயர்லாந்துக் குடியரசுடன் வடஅயர்லாந்து ஒன்றாக வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள். இவர்கள் குடியரசுவாதிகள் (republicans) அல்லது தேசியவாதிகள் (nationalists) என அழைக்கப்படுகிறார்கள். 1968 இலிருந்து 1998 வரையான முப்பது வருடக் காலப்பகுதியில் வடஅயர்லாந்து அரசுக்கும் கத்தோலிக்க மறையைச் சேர்ந்த அயர்லாந்து குடியரசு இராணுவம் என அழைக்கப்ட்ட போராளிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வந்தன. 1998ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 10ம் திகதி புனித வெள்ளித் தினத்தன்று வரையப்பட்ட அமைதி உடன்படிக்கையில் அடையப்பட்ட அதிகாரப்பகிர்வுடன் வட அயர்லாந்தில் மோதல்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தன.

நன்றி: தகாடியன்.கொம் theguardian.com