ஆப்கானிஸ்தானில் தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

ஆப்கானிஸ்தான் மத்திய மாகாணமான கோரில், பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு மாத இடைவெளியில் ஐந்து பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்.

பிஸ்மில்லா ஐமக், ஒரு உள்ளூர் வானொலி நிலையத்தின் ஆசிரியராக இருந்தார் என்றும்  இதற்கு முன்னரும் நடந்த ஒரு கொலை முயற்சியிலிருந்து ஐமக் தப்பினார் எனவும் ‘ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்’ என்கிற அமைப்பு கூறியிருக்கிறது.

இப்படிப்பட்ட பல கொலைச் சம்பவங்களுக்கு, எந்த ஆயுதமேந்திய குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், இப்படிப்பட்ட கொலைகளில் பெரும்பாலானவற்றுக்கு தாலிபன்தான் பொறுப்பு என்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதை ஐ.நா சபை, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகள் கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.