கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா அவசரகால அனுமதி

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் நிபந்தனைகளுடன் வழங்கலாம் என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவிக்கையில்,

“ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் மேம்படுத்தி வரும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது” என்றார்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சனிக்கிழமை நடைபெற்ற சிடிஎஸ்சிஓ நிபுணா் குழு கூட்டத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிப்பதற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு தடுப்பூசிகள் தொடர்பான பரிந்துரைகள் மீது இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் இறுதி அனுமதி வழங்கிய பிறகே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொது பயன்பாட்டுக்கு தடுப்பூசி மருந்துகளை விநியோகம்  செய்ய முடியும்.