உடல்களைப் புதைக்க இடமில்லை – கொரோனாவின் உச்ச பாதிப்பில் அமெரிக்கா!

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் உடலை புதைக்க இடமில்லாமல் கல்லறைகளில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் தெற்குப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லறைகளில் புதைக்க இடமில்லாமல் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும் சோகம் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை இன்னும் உலுக்கிவருகிறது. இதில் உலக நாடுகளிலேயே மோசமாக பாதிக்கப்பட்டது அமெரி்க்காதான். இதுவரை 3.50 இலட்சம் மக்களுக்கு மேல் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர், 2 கோடி மக்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரி்க்காவில் நேற்று 2.32இலட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,107 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

அதே நேரம் கலிபோர்னியாவில் உள்ள தெற்குப்பகுதி நகரங்களில் கொரோனாவில் உயிரிழந்தவர்களை புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் மனித உடல்கள் நாட்கணக்கில் காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 கலிபோர்னியா ஃபனரல் டைரக்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் இயக்குநர் பாப் ஆச்சர்மான் கூறுகையில் “ கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காரணமாக, உடல்களை புதைக்கும், எரிக்கும் பணி தொடர்ந்து தாமதமாகியுள்ளது. வழக்கமாக ஒருவர் இறந்துவிட்டால் 2 நாட்களில் உடல்அடக்கம் நடந்துவிடும், ஆனால், இப்போது ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிறது.

எங்களால் உடல்களை பாதுகாக்க முடியவில்லை. இன்னும் மோசமான நாட்கள் எங்களை நோக்கி இருக்கிறது” என்றார்.