ஆக்கிரமிப்பு இஸ்பெயினால் கட்டலோனிய அரசியல் வாதிகள் சிறையிலிடப்பட்டனர்;கொந்தளிக்கும் மக்கள்

ஸ்பெய்னின் கட்டலோனியாவில் 2017ஆம் ஆண்டு தோல்வியில் முடிவடைந்த சுதந்திர முயற்சி தொடர்பாக கட்டலோனிய  தலைவர்கள் ஒன்பது பேருக்கு ஸ்பெய்னின் உச்ச நீதிமன்றமானது கடுமையான சிறைத் தண்டனைத் தீர்ப்பை நேற்று வழங்கியதைத் தொடர்ந்து கோபமடைந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டலோனியத் தலைநகர் பார்சிலோனாவின் வீதிகளை நிரப்பியதுடன், பார்சிலோனா விமானநிலையத்தையும் முடக்கியிருந்தனர்.

தடை செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி சர்வஜன வக்கெடுப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த சுதந்திரப் பிரகடனம் தொடர்பான வகிபாகங்களுக்காக 12 பிரதிவாதிகள் குறிப்பிடப்பட்டு இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை இடம்பெற்று வந்திருந்தது.

விசாரணையைத் தவிர்ப்பதற்காக ஸ்பெய்னை விட்டு வெளியேறிய கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லஸ் புய்க்மொன்னின் பிரசன்னம் இல்லாத நிலையில் பிரதான பிரதிவாதியான கட்டலோனியாவின் உப ஜனாதிபதி ஒரியொல் ஜுவான்குவாரஸுக்கு அதிகபட்சமாக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சிறைத்தண்டனைகளை மோசமானவை என பெல்ஜியத் தலைந்கர் ப்ரஸெல்ஸிலிருந்து கார்லஸ் புய்க்மொன்ட் விமர்சித்திருந்த நிலையில், கதை முடியப் போவதில்லை என நேற்று  வெளியிடப்பட்ட கடிதமொன்றில் ஒரியொல் ஜுவான்குவாரஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் பக்கத்தை திருப்ப வேண்டும் என ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சந்தேஸ் கூறியிருந்தார்.

எவ்வாறெனினும், கார்லஸ் புய்க்மொன்டுக்கு புதியதொரு சர்வதேச பிடிவிறாந்தை பிறப்பித்திருந்த நிலையில், கார்லஸ் புய்க்மொன்ட்டுக்கும், வெளிநாடு சென்ற மேலும் ஐந்து பேருக்கும் நெருக்கடி நிலைமையின்போது அவர்களின் வகிபாகத்துக்கான விசாரணை மேற்கொள்ளும் வரை ஸ்பெய்ன் ஓயாது என்றே கருதப்படுகிறது.