தொலைத்த இடத்தில் தேடுவோம் ! ஈரோஸ் அறைகூவல்

தமிழ் பேசும் மக்கள் தமது தேசிய அந்தஸ்தைத் தொலைத்த இடத்திலிருந்து மீண்டும் நிலைநாட்டுவதற்குச் சாதகமான சர்வதேச, உள்ளூர் அரசியல் நிலைமைகள் கூடி வரப்பெற்றுள்ள சந்தர்ப்பத்தைச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்ள அறைகூவல் விடுப்பதாக ஈரோஸ் இயக்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, கரைதுறைபற்று, புதுக்குடியிருப்பு பகுதிகளில் பகிரப்பட்ட அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இரவு நேரமொன்றில் கடற்கரையில் உலாவச் சென்ற நண்பர்கள் சிலர்  விலையுயர்ந்த மோதிரத்தைத்   தொலைத்து விட்டார்கள். தொலைந்து போன மோதிரத்தைத்  தெரு விளக்கொன்றின் கீழே தேடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த வழியால்  வந்த புதியவர் ஒருவர் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார்.  கடற்கரையில் மோதிரத்தைத் தொலைத்து விட்டோம் அதைத் தான் இங்குத் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்றார்கள் நம் நண்பர்கள்.

கடற்கரையில் தொலைத்ததை ஏன் தெருவிளக்கின் கீழ் தேடுகின்றீர்கள் என்று கேட்டார் புதியவர். அதற்கு நம் நண்பர்கள் கடற்கரையில் இருட்டாக இருக்கின்றது. அதனால் தான் வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்கள்.

2009 ஆம் ஆண்டின் பின் தமிழர் தரப்பின் அரசியல் முன்னெடுப்புக்களும் தெருவிளக்கின் கீழ் மோதிரம் தேடியது போல் தான் சென்று கொண்டிருக்கின்றது. வெளிச்சம் இருக்கும் இடங்களில் தேடுவதால் மோதிரம் கிடைக்காது.

தொலைத்த இடத்தில் தேடினால் தான் கிடைக்கும். தொலைத்த இடத்திற்கு வெளிச்சம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் தொலைத்ததைத் தொலைத்த இடத்திலேயே தேட ஒரு சாதகமான வாய்ப்பு கிடைத்துள்ளது.  அந்த சந்தர்ப்பத்தைச்  சாதகமாகப்  பயன்படுத்திக் கொள்வதற்காகவே சனாதிபதி தேர்தலில்  பொதுஜன முன்னணியை  ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றோம்

நாம் பொதுஜன முன்னணியினருடன் நடத்திய பல மட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ் பேசும் மக்கள் சமகாலத்தில்  எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முழு இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

எமது பிரதேசங்களில் எமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் அபிவிருத்தி தொடர்பான எமது கோரிக்கைகளுக்கு  மிகச் சாதகமான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்கள். அவற்றிற்கு இணக்கம் தெரிவித்தே எம்முடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்கள். நிலையான அபிவிருத்தியே நாம் தொலைத்ததைத் தேட ஆரம்பிப்பதற்கான முதல் வெளிச்சம்.

நாம்  பொதுஜன முன்னணி மீது கண்மூடித்தனமான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு இந்த முடிவை எடுக்கவில்லை. தேசிய,. சர்வதேச நிலைமைகளை ஆராய்ந்தே, எமது ஆதரவால் வெற்றி வாகைசூடக் கூடிய வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யத் தீர்மானித்துள்ளோம்.

சனாதிபதியாகப் பதவியேற்பவர் எதைச் செய்தாலும், எங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், சீன ஏகாதிபத்தியத்துக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்ட பொதுசன முன்னணி வெற்றி பெற்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் சனாதிபதியை தமது வழிக்குக் கொண்டு வரத் தமிழர் உரிமை போராட்ட விவகாரத்தை மீண்டும் கையிலெடுக்கும்.

இப்படியான சூழலில் புதிய சனாதிபதி ஒன்றில் சர்வதேசத்துக்கு இணங்கி செல்ல நேரிடும், அல்லது தமிழ் மக்களை வென்றெடுக்கும் வகையில் எமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குச்  சார்பான ஐதேகவை ஆதரித்து வெற்றிபெறச் செய்தால் கடந்த நான்கரை வருடங்களாக நடந்தது போல் தமிழர் விவகாரத்தைச் சர்வதேசம் கிடப்பில் போட்டுவிடும்.  ஐதேக மீண்டும் தமிழ் பேசும் மக்களை அழிக்கும்  நுட்பமான நடவடிக்கைகளையும், சாதாரண மக்களின் வயிற்றிலடிக்கும் வேலையையும் தொடர்ந்து முன்னெடுக்கும்.

எனவே, தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் ஒற்றுமையாய் இணைந்து செயல்பட்டு, எமது இருப்பை தக்க வைக்கவும், இழந்து விட்ட அபிவிருத்தியை விரைவாக ஏற்படுத்தவும் புத்திசாதூர்யமாக சிந்தித்துச்  செயல்பட வேண்டும்.

நாம் கூறும் அபிவிருத்தி தெருக்களும், கட்டிடங்களும் அல்ல. நாம் எமது சொந்த மண்ணில், எமது எமது ஆதிக்கத்தை நிலைநாட்டும், சமூக கட்டுமானத்தையும் இருப்பையும் வலுப்படுத்த உதவும் நிலையான அபிவிருத்தியாகும்.

எதிர்த்தரப்புடனான  சமரசம் எப்போதும் எம்மை பலம் மிக்கவர்களாக வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளைத்  தரும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது பலவீனமாக இருந்த சோவியத் ஒன்றியம், பலமான யேர்மனியை வீழ்த்தக் கூடிய அளவில் வளர்ச்சி பெற உதவியது

சோவியத் அதிபர் ஸ்டாலின் . யேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருடன் செய்து கொண்ட தற்காலிக அமைதி ஒப்பந்தமாகும்.   இதுபோலவே இன்றைய நிலைமையில் எம்மை பலப்படுத்திக் கொள்ள ஒரு நிழல் தேவை! இடைவெளி தேவை! அவகாசம் தேவை! ஆதரவு தேவை!

காலம் எமக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கின்றது. ஈரோஸ் அமைப்பினராகிய நாம் தூர நோக்குடன் அதைப் பயன்படுத்தும் முடிவை எடுத்துள்ளோம்.

தமிழ் பேசும் மக்களும் அரசியல் ரீதியாகத் தெளிவாகச் சிந்தித்து ஓரணியில் நின்று சரியான அரசியல் முடிவை எடுக்க வேண்டும். எம்முடன் இணைந்து பொதுசன முன்னணியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எம்மையும் பலப்படுத்த வேண்டும் எனப் பேரன்புடன் கோரிக்கை விடுக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

EROS leaflet page 01 தொலைத்த இடத்தில் தேடுவோம் ! ஈரோஸ் அறைகூவல்

EROS leaflet page 02 தொலைத்த இடத்தில் தேடுவோம் ! ஈரோஸ் அறைகூவல்