அவுஸ்திரேலியாவில் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கும் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சை என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் சிகிச்சை வழங்கப்படாமல் தடுப்பிற்கான மாற்று இடமாக உள்ள ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நவுருத்தீவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 10 அகதிகள் ஏன் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறித்து அவுஸ்திரேலிய எல்லைப்படை இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டலின் 71வது மாடியில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் அறையை விட்டு வெளியில் வர காவலாளிகள் அனுமதிப்பதில்லை எனக் கூறுகிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல்.

அத்துடன், மருத்துவ சிகிச்சை என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகளுக்கு இரண்டு மாதங்களாகியும் சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் கூறுகிறார் ரிண்டோல்.

முகாம்களைப் போல அகதிகளை சிறைவைக்க தற்போது ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வர ஹோட்டல் முதலாளிகளுக்கு அகதிகளின் பெயரால் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அவுஸ்திரேலிய எல்லைப்படை செலவழிப்பதாக கவலைத் தெரிவிக்கிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல்.