அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை ஜே.வி.பி பரிந்துரைத்துள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜே.வி.பிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதுமில்லை ஆகவே அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கான அவசியம் கிடையாது என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்’.
மறுபுறம் ‘அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆறுமாத பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையை கூட்டு விருப்பத்துடன் மறுசீரமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்’ என்று உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், ‘அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபைமுதல்வராக பாராளுமன்றத்தில் செயற்படும் விதம் குறித்து எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல பாராளுமன்ற உயர் அதிகாரிகளும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்’.
‘தான்தோன்றித்தனமான முறையில் செயற்படுவது சபை முதல்வர் பதவிக்கு அழகல்ல, ஜே.வி.பிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் பனிப்போர் தீவிரமடைந்துள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ‘அரசாங்கத்தில் தேசிய மக்கள் சக்தியினர் ஆதிக்கம் கொண்டுள்ளதை ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்த்து வருகிறார்கள்’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



