காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப் போன்று தற்போதைய அரசும் செயற்படாமல், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க முன்வர வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘காணாமலாக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் அரசாங்கம் கவனயீனமாகச் செயற்படுகின்றது’.
‘கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு இராணுவத்திடம் கையளித்த உறவுகளை, மீளக் கையளிக்குமாறு அவர்களின் உறவுகள் தொடர்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்’. ‘இவ்வாறு கையளிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீளக்கையளிக்குமாறு கோரும் அவர்களது உறவுகளை அரசாங்கங்கள் தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன’ என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
‘குறிப்பாக ஏற்கனவே தேர்தல் காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு வழங்கப்படுமென இந்த அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்’. ‘ஆனால் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை’. ‘இத்தகைய சூழலில் இங்கு இனப்படுகொலையே இடம்பெறவில்லையெனவும், அவ்வாறு இனப்படுகொலை இடம்பெற்றமைக்கு ஆதாரங்கள் எவையுமில்லையெனவும் அமைச்சர்களே சொல்லுமளவிற்கு நிலைமைகள் மாற்றமடைந்துள்ளன’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.



