அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்க மக்களின் முடிவை மதிக்கிறோம் – சீனா வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அவர்களுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இதுவரை சீனா வாழ்த்துத் தெரிவிக்காது இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டே உறுதி செய்யப்படும் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற ஜோ பைடன்  எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்பார். அதுவரை தற்போதைய அதிபர் ட்ரம்ப் பதவியிலிருப்பார்.

இந்த அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்திக் கொடுக்கும்படியும், ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறும் ட்ரம்ப்புக்கு அமெரிக்காவில் நெருக்கடி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.