அகதிகளின் மீள்குடியேற்றத்தை குறைத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா அரசுகள்

உலகின் மிகப்பெரிய பொருளாதார பலமிக்க நாடாக கருதப்படும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, 481 சிரிய நாட்டு அகதிகள் மட்டுமே அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையில் 96 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே போல், கடந்த அக்டோபர் 2019 முதல் செப்டமர் 30, 2020 வரை 11,814 அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை 2016ம் ஆண்டில் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்ட மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 86 சதவீதம் வீழ்ந்து காணப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2016ம் ஆண்டு சுமார் 85,000 அகதிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 11,814 அகதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், 2020- 21 நிதிநிலை அறிக்கையில் அகதிகளுக்கான 5 ஆயிரம் இடங்களை குறைத்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.