பௌத்த பிக்குகள் கொலை-33 வருடங்களின் பின் வழக்கை ஆரம்பித்த அரசு

இலங்கையில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை  அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது.

அம்பாறை – அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு ஜுன மாதம் 2ஆம் திகதி, பௌத்த பிக்குகள் அடங்களாக 33 பேர் கூட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகவே கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,1987ஆம் ஆண்டு அரந்தலாவ பகுதியில் நடந்த படுகொலை சம்பவம் தொடர்பில், உடனடி விசாரணைகளை ஆரம்பித்து, இரு வாரங்களுக்குள் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, பதில் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில், குற்றவியல் விசாரணைகளை நடத்துமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் கூட்டாக பல்வேறு சந்தர்ப்பங்களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு நியாயம் கோரி போராடி வருகின்ற போதிலும், அந்த சம்பவங்களை விசாரணை செய்யாது, பௌத்த பிக்குகளின் படுகொலை சம்பவத்தை மாத்திரம் விசாரணை செய்வது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். மேலும் தமிழர்கள் மீதான படுகொலைகள் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.