சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதை வென்ற தமிழ் பெண் ரனிதா ஞானராஜா

298 Views

அமெரிக்காவால் வழங்கப்படும் சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதுக்கு, இலங்கையின் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக, இந்த விருது வழங்கும் நிகழ்வை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்த ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஜில் பைடன், தேர்வு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக ரனிதா ஞானராஜா தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.

யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா ஞானராஜா வழங்கி வருகின்றார்.

தனிப்பட்ட முறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இவர், பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ரனிதா ஞானராஜா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள பெண்களின் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் அமைதிக்கான வாதிடலையும் அங்கீகரித்து, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டல் போன்றவற்றுக்காக தனிப்பட்ட ரீதியில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியமைக்காக, அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவை தொடர்புக் கொண்டு வினவியது.

தான் தொடர்ச்சியாக மனித உரிமை செயற்பாடுகள், பெண் உரிமைகள் தொடர்பில் செயற்பட்டமையை அடிப்படையாக வைத்தே, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தனக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சித்ரவதைகள், காணாமல் போனோர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள், தடுப்பு காவலிலுள்ள கைதிகளின் விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்களை தான் தொடர்ச்சியாக முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது மனித உரிமை செயற்பாட்டு நடவடிக்கைகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இதற்கு முன்னர் இருவருக்கு இந்த விருது வழங்கப்பட்ட போதிலும், தமிழ் பெண் என்ற அடிப்படையில் தானே இந்த விருதை முதல் தடவையாக பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மனித உரிமை தொடர்பில் செயற்படும் பெண் சட்டத்தரணிகளுக்கும், நீதிக்காகவும் பொறுப்புகூறலுக்காகவும் போராடும் பெண்களுகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே தான் இதனை கருதுவதாக ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் காணாமல் போனோர் விவகாரம், மனித உரிமை மீறல் உள்ளிட்ட போராட்டங்கள் முடிவடையாத நிலையிலேயே இந்த விருது கிடைக்கின்ற இந்த தருணத்தின் பின்னரான காலத்தில், இந்த விடயங்களை முழுமையாக பூர்த்தி செய்ய முடியுமா என பிபிசி தமிழ், சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவிடம் கேள்வி எழுப்பியது.

”யுத்த சூழல் அல்லது இன முரண்பாடு இடம்பெற்ற நாடுகளின் வரலாற்றை பார்த்தால், எஞ்சியிருக்கும் பிரச்னைகள் தீர்க்கப்பட்டதாக எங்கும் வரலாற்றில் பதிவாகவில்லை. ஆனால், அடி மேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்ற மாதிரி, நாங்கள் அந்த விடயத்தில் விடாது குரல் கொடுத்தால் மாத்திரமே, அதற்கான பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அந்த வழியிலேயே நான், இந்த நாட்டிற்குள் இருந்து குரல் கொடுத்து வருகின்றேன். நான் மாத்திரமன்றி, என்னுடன் இருக்கின்ற சட்டத்தரணிகளும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து கொண்டுள்ளார்கள். பெரியளவிலான விடயங்கள் பூர்த்தி செய்யப்படாத போதிலும், சிறு சிறு விடயங்கள் பூர்த்தியாகியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. எங்களது போராட்டத்திற்கும், எங்களது குரல் கொடுப்புக்குமான தீர்வொன்று என்றாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படியே, எமது வேலையை செய்கின்றோம்” என அவர் பதிலளித்திருந்தார்.

சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருது உங்களுக்கு கிடைப்பதன் ஊடாக, இலங்கை மக்களுக்கு எவ்வாறான நன்மைகள் எதிர்காலத்தில் கிடைக்கும் என பிபிசி தமிழ், சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவிடம் வினவியது.

”மக்களுக்கு நன்மை கிடைக்குமா இல்லையா என்பது கேள்விக்குறியான விடயம். ஆனால், எனக்கு கிடைத்த இந்த விருது என்பது இன்னும் பலருக்கு முன்னுதாரணமாக வரும். ஏனென்றால், சுயநலம் இல்லாமல், அர்ப்பணிப்புடன், போராட்ட குணத்துடன் பாதிக்கப்படும் தரப்பிற்கு உண்மையாகவே குரல் கொடுக்க வேண்டும் என்ற உந்து சக்தியை கொடுப்பதற்கான முன்னுதாரணமாக நான் இருக்கலாம் என நினைக்கின்றேன். அதற்கு ஓரு பெரிய உறுதுணையாக இந்த அங்கீகாரமும், விருதும் மற்றவர்களுக்கு இருக்கும் என நான் நினைக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இதுவரை தான் முன்னெடுத்த அனைத்து பணிகளையும், இவ்வாறே இனிவரும் காலங்களிலும் தான் முன்னெடுக்கவுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா கூறுகின்றார்.

நன்றி – பிபிசி

Leave a Reply