அம்பாறையில் காவல்துறையினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொடரும் போராட்டம்

சாத்வீகப் போராளி அம்பிகை அவர்களால் பிரித்தானிய அரசை நோக்கி சிறீலங்காவுக்கு எதிரானதும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டியும் 10 ஆம் நாளாக தொடரப்படும் சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்பு தியாகப்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து #P2P சிவில் சமூக அமைப்பினரால் அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலய வளாகத்தில் மூன்றாவது நாளாக சுழற்சிமுறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் தொடரந்து செல்கின்றது.

வழமைபோல்  காவல்துறையினரால் இராணுவப் புலனாய்வாளர் களினதும் பாரிய அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஊடகவியலாளர்கள் மீது அரச புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு சிவில் சமூகங்களால் முன்னெடுக்கப்படும் அகிம்சை வழியிலான போராட்டங்களுக்கு அச்சுறுத்தல்களும் தடையாணைகளும் வழங்கப்படுவது பொதுமக்களை அச்சத்திற்கு உட்படுத்தியுள்ளது.

இன்றைய சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் கல்முனைப் பிரதேச்சபை உறுப்பினரும் ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலைய பூசகருமான திரு அழகக்கோன் விஜயரெத்தினம் அவர்கள் கலந்து கொண்டு காவல்துறையினரின் திட்டமிட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராக அவரது கண்டனத்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அம்பாறை மாவட்ட #P2P இணைப்பாளர் திரு .தாமோதரம் பிரதீபன் மற்றும் ஏற்பாட்டுக்குழுவின் நிரவாக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.சந்திர சேகரம் ராஜன் அவர்களுக்கு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட தடையாணை தொடர்பில் கலந்து கொள்ள முடியாத சூழ் நிலைகள் ஏற்பட்டுள்ளது.

நாவிதன் வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி மற்றும்  அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாண்டிருப்பு,கல்முனை பொதுமக்கள்,இளையோர்கள் என அனைவரும் கலந்துகொண்டு இந்த சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போரட்டத்தில் பங்குகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.