ஈரான் இராணுவத் தளபதி சுலைமானி கொலை உளவாளிக்கு மரண தண்டனை

கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஈரான் இராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கா கொன்றது.

இந்தக் கொலைக்கு அமெரிக்கா பல காரணங்களை வெளியிட்டது. சுலைமானி அமெரிக்கர்களை துன்புறுத்தியதாகவும், அமெரிக்காவிற்கு எதிராக பல சதிகளை மேற்கொண்டதாகவும் காரணம் கூறியது அமெரிக்கா.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. சுலைமானி கொலையினால் இரு நாடுகளுக்கிடையே போர் உருவாகும் சூழ்நிலை தோன்றியது. சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினை அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதேவேளை காசிம் சுலைமானி இருக்கும் இடங்கள் உட்பட அவரின் தகவல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவு நிறுவனங்களான சி.ஐ.ஏ, மொஸாட் ஆகியவற்றிற்கு வழங்கியதாக மஹ்மவுத் மவுசாலி மஜ்த் என்பவரை ஈரான் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ஈரான் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலம் ஹுஸைன் இஸ்மெய்லி கருத்துத் தெரிவிக்கையில், சி.ஐ.ஏ, மொஸாட் ஆகியவற்றின் உளவாளிகளில் ஒருவரான மஹ்மவுத் மவுசாலி மஜ்த் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டின் எதிரிகளுக்கு இவர் தளபதி சுலைமானி பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார் என்று கூறினார். மேலும் எப்போது தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து அவர் கூறவில்லை.

கடந்த சில மாதங்களாக சி.ஐ.ஏக்காக பணிபுரிந்து வந்த சுமார் 17 உளவாளிகளை ஈரான் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மஜ்த் வழக்குடன் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அவர்களில் சில உளவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சுலைமானியின் மரணம் தொடர்பான வழக்கு விபரங்களில் மஹ்மவுத் மவுசாலி மஜ்த்தின் பெயர் மட்டுமே வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.