RIC (ரஷ்ய- இந்திய – சீன) –ஒன்றுகூடல் எதற்காக?

இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

தற்போதைய கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் இந்தியா – சீனாவிடையே எல்லைப் போர் நடைபெற்று வருகின்றது. அதே சமயம் அமெரிக்கா – சீனாவிற்கிடையே வர்த்தகப் போர் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இந்திய – சீன எல்லைப் போரில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது ரஷ்யா அமைதியாக உள்ளது.

இவற்றிற்கு மத்தியில் இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி வீடியோ அழைப்பில் ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். ரஷ்யாவின் அழைப்பின் பேரிலேயே இந்த ஒன்றுகூடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த முத்தரப்புக் கூட்டமைப்பு RIC (Russia-India-China) என்றழைக்கப்படுகின்றது. இந்த ஒன்றுகூடலில் எதைப் பற்றிப் பேசவிருக்கின்றார்கள் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் மூன்று நாட்டினதும் பாதுகாப்பு, ஒற்றுமை குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்திய – சீன எல்லைப் பிரச்சினையில் லடாக் எல்லையில் இரு நாடுகளும் மோதிக் கொள்கின்றன. பாங்கொங் திசோ பகுதியில் தான் தொடர்ந்து சண்டை நடந்து வருகின்றது. இங்கு இருக்கும் 8 கட்டுப்பாட்டுப் பகுதிகளை யார் கட்டுப்படுத்துவது, யாருக்கு உரிமை அதிகம் உள்ளது என்பதில் குழப்பம் உருவாகியுள்ளது.

அத்துடன் இரண்டு நாட்டு பிரச்சினையை கவனித்து வரும் ரஷ்யா, இந்த இரு நாடுகளும் அமைதி பேண வேண்டும் என்றும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினையில் அமெரிக்கா பங்குபற்றுவதற்கு இடங்கொடுக்கக் கூடாது என்றும் கூறி வரும் நிலையில், இந்த ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த RIC ஒன்றுகூடலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்தியாவை G 7 நாடுகளின் குழுவில் இணைப்பதற்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், இந்தியா இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்வது அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.