கடந்த 2 வாரங்களாக தினமும் 1இலட்சம் புதிய கொரோனா நோயாளர்கள் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களாக உலகம் முழுவதும் தினமும் 1இலட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 81இலட்சத்து 7ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34இலட்சத்து 81ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 இலட்சத்து 87ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 இலட்சத்து 38ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1இலட்சம் நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இது குறித்து அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், தொடக்கத்தில் வைரஸ் 1இலட்சம் பேருக்கு பரவ இரண்டு மாதங்களுக்கு மேலானது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 1இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பரவுகிறது. குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. வைரஸ் மறு எழுச்சி பெறலாம் என்பதால் உலக நாடுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.