நெல்லியடியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பம்

நெல்லியடி – மந்துவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (24) ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த இளைஞர், தம்மை கைது செய்து அழைத்து சென்று பொலிஸார் கடுமையாக தாக்கியதாக தெரிவித்திருந்தார்.  இதன்போது தமது கை முறிந்ததாகவும் குறித்த இளைஞர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

நெல்லியடி பகுதியில் தொலைபேசி கேபிள் வயம் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் தம்மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடளித்திருந்தார்.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்துக்கு வருமாறு நெல்லியடி பொலிஸாருக்கும் அந்த பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.