கன்னியா வெந்நீரூற்று வழக்கில் தொல்லியல் திணைக்களம் முக்கிய வாக்குறுதி!

கன்னியா – வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானம் தொடர்பான வழக்கு விசாரணையானது திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது தொல்லியல் திணைக்களத்தினால் எழுத்துமூலமான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அத்துடன், ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி எல்லைகளை மீறி எந்தவொரு புதிய கட்டுமானமும் செய்யப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மற்றொரு இடம் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் அளவீடு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டது.

அந்த தொல்லியல் அடையாளமாகக் கருதப்படும் இடத்தை பேணிப் பாதுகாப்பதற்கு மட்டுமே தொல்லியல் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அங்கு செங்கற்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் கொண்டுவந்து குவிக்கப்பட்டு குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு புறம்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து வழக்கறிஞர் பிரசாந்தினி உதயகுமார் தரப்பில் மேல் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருந்தது.

கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் திணைக்கள நாயகமும் மாவட்டச் செயலாளரும் இது தொடர்பான விளக்கத்தை நீதிமன்றத்திற்கு அளிக்கும் வரை அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மாவட்டச் செயலாளர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நீண்ட அறிக்கையில், தாங்கள் செய்வது அனைத்தும் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமே என்றும், புதிய கட்டடங்கள் எதையும் கட்டவில்லை என்றும் உறுதிமொழி அளித்துள்ளனர்.

பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போது சேதமடைந்த அல்லது பழுதடைந்த இடங்களை மட்டுமே மீண்டும் சரிசெய்யும் பணியை மேற்கொள்கிறோமே தவிர புதிய விகாரையோ அல்லது வேறு கட்டடங்களோ அமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எழுத்துமூலமான அறிக்கை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி எல்லைகளை மீறி எந்தவொரு புதிய கட்டுமானமும் செய்யப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.