8 பில்லியனை அடைந்த உல மக்கள் தொகை-ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணம் என்ன? கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால்

62 Views

உலகின் மொத்த சனத்தொகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அளவில் 8 பில்லியன்களை தொடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

இந்த நிலையில், நுவரேலியா மாவட்டத்தின் கொத்மலை கோட்டக் கல்விப் பணிப்பாளரும், சமூக ஆய்வாளருமான கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால்”இலக்கு” மின்னிதழுக்குவழங்கிய சிறப்பு  செவ்வி….

கேள்வி:- உலகின் சமகால சனத்தொகை நிலைமைகள் எவ்வாறுள்ளன?

*பதில்:- உலகின் சனத்தொகை தற்போது வேகமாக அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.இதனடிப்படையில் உலகின் சனத்தொகை விரைவில் 8 மில்லியனை எட்டிவிடும் என  கூறப்படுகின்றது.

இந்த வகையில் இலங்கையிலும் கூட சனத்தொகையின் துரிதமான அதிகரிப்பினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.பெரும்பாலும் வறிய நாடுகளில் சனத்தொகையின் அதிகரிப்பு உக்கிமடைந்து வருவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன.குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் சனத்தொகை துரிதமான அதிகரிப்பினை வெளிப்படுத்தி வருகின்றது.இது மோசமான பின்விளைவுகளுக்கும் வித்திட்டுள்ளது என்றால் மிகையாகாது.

குறிப்பாக வறிய நாடுகள் ஏற்கனவே பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன. உணவின்மையால் ஏற்படும் பசி, பட்டினி, பஞ்சம் போன்றன இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். உணவு நெருக்கடி இத்தகைய நாடுகளில் அதிகரித்து காணப்படும் நிலையில் மக்கள் பெரும் பரிதாப நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். அத்தோடு மந்தபோஷணை நிலைக்கும் இவர்கள் ஆளாகி வருவதோடு நோய் நொடிகளும் இவர்களை ஆட்டிப்படைக்கின்றன. இந்த நிலையில் பல்துறை பின்னடைவுகளுக்கும் இவர்கள் முகம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இதனிடையே சனத்தொகை இத்தகைய நாடுகளில் திடீர் அதிகரிப்பினை வெளிப்படுத்தும் நிலையில்  இத்தகைய நாடுகளில் மக்கள்படும் துன்பங்கள் மேலும் இரட்டிப்பாகியுள்ளன என்பதையும் குறிப்பிட்டாதல் வேண்டும்.

உலகம் வேகமாக  அதிகரித்து வரும்சனத்தொகையின் காரணமாக பல்வேறு பொதுவான சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.மேற்கூறிய உணவுப் பிரச்சினையுடன், குடியிருப்பு, சுகாதாரம், மருத்துவம், இடம் போன்ற பிரச்சனைகளும் சனத்தொகை அதிகரிப்பால் ஏற்படுகின்றது.இத்தகைய நிலைமையினை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருவதும் ஏனைய நாடுகளிடம் கையேந்தி வருவதும் புதிய விடயமல்ல.எனவே சனத்தொகை அதிகரிப்பு தற்போது உலக நாடுகளில் பல சவால்களை தோற்றுவித்துள்ளது என்று கூறலாம்.

கேள்வி:- நீங்கள் கூறியதைக் போன்று உலகம் 8 மில்லியன் சனத்தோகையினை விரைவில் எட்டவுள்ள நிலையில் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றதே!

* பதில் :- ஒரு சமூகத்தின் இருப்பு மற்றும் அடையாளங்கள் என்பவற்றை தக்க வைத்துக் கொள்வதற்கு அச்சமூகம்சார் சனத்தொகையில் அதிகரிப்பு காணப்பட வேண்டியது அவசியமாகும்.சனத்தொகை அதிகரிப்பின் ஊடாக சாதக விளைவுகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை மறுப்பதற்கில்லை.இந்த வகையில் ஒவ்வொரு சமூகமும் தன்னைச் சார்ந்த சமூகத்தின் சனத்தொகை அதிகரிப்பினை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.எனினும் பெரும்பான்மைச் சமூகத்தினர் அல்லது பேரினவாதிகள் ஏனைய சமூகத்தினரின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதிலும், அச்சமூகத்தினரின் சனத்தொகை அதிகரிப்பை மழுங்கடிப்பதிலும் பல்வேறு கைங்கரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.குடும்பக் கட்டுப்பாடு இவற்றில் முக்கியமானதாகும்.

மலையக பெருந்தோட்ட மக்கள் மத்தியில் குடும்பக்  கட்டுப்பாடு என்பது ஒரு கால்த்தில் துரிதமாக அதிகளவில் முன்னெடுக்கப்பட்டமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி கடந்த காலத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இச்சலுகைகளுக்கு அடிபணிந்து மலையக பெருந்தோட்ட மக்கள் குடும்ப கட்டுப்பாட்டினை மேற்கொள்ள முன்வந்தனர். இதனால் அச்சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி நிலையினை அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே ஒரு குடும்பத்தில் நான்கு அல்லது ஐந்து பிள்ளைகள் மலையக வீடுகளில் காணப்பட்டார்கள். எனினும் தற்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளதோடு பெரும்பாலான குடும்பங்களில் ஓரிரண்டு பிள்ளைகளே காணப்படுகின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.இத்தகைய ஒரு சூழலில் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

கேள்வி:- ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு   அரசியல், பொருளாதாரம், பெண்ணடிமைத்தனம், அடக்குமுறையின் அச்சம், இவற்றுள்    செல்வாக்கு செலுத்தும் காரணிகள் பற்றி கூறுங்களேன்?

* பதில்:- ஒரு சமூகத்தின் எண்ணிக்கை வீழ்ச்சியில் நீங்கள் குறிப்பிட்டபடி  பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பது உண்மைதான்.இந்த வகையில் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி தொடர்பில் நாம் பல்வேறு விடயங்களையும் நோக்க வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது.

நீங்கள் மேற்கூறியபடி அனைத்து காரணிகளும் உண்மையில் இதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதா? என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.குறிப்பாக இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினரின் செல்லாக்காசு நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.” சாண் ஏறினால் முழம் சறுக்கும்” நிலையில் அவர்கள் இருந்து வருகின்றார்கள்.எனவே அரசியலில் ஈழத்தமிழர்களை மென்மேலும் மட்டம் தட்டும் நோக்கிலும், இச்சமூகத்தினரின்  பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நோக்கிலும் சனத்தொகை குறைப்பு நடவடிக்கைகளிலும்,குறைத்துக் காட்டும் நடவடிக்கைகளிலும் விஷமிகள் ஈடுபடக்கூடிய வாய்ப்புள்ளது.இதேவேளை பிழையான பதிவுகள் காரணமாகவும் எண்ணிக்கையில் வீழ்ச்சி நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்திய வம்சாவளி மக்கள் சிலர் தங்களது இன் அடையாளத்தை, இலங்கை தமிழர் என்று பிழையாக பதிவிட்டதன் காரணமாக அச்சமூகத்தினரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி நிலை ஏற்பட்டதாக புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நாட்டில் மேலெழும்பும் பொருளாதார சிக்கல் நிலையால் ஈழத்தமிழர்களும் சொல்லொணா துன்ப துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அது பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற சிந்தனை பெற்றோரிடையே வலுப்பெறுகின்றது. இந்நிலையானது பிறப்பு வீதத்தில் தாக்கம் செலுத்துவதாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.இத்தகைய நிலைமைகளும் சனத்தொகையில் வீழ்ச்சி நிலையை ஏற்படுத்துவதில் பாரிய வகிபாகத்தினைக் கொண்டிருக்கக் கூடும் என்பதே உண்மையாகும்.

அடக்குமுறைக்கு அச்சப்படாதவர்களாக ஈழத்தமிழர்கள் விளங்குகின்றார்கள். எதனையும் துணிந்து கூறக்கூடிய, அல்லது தட்டிக் கேட்கக்கூடிய ஆற்றல் அவர்களுக்குள்ளது. எனவே அத்தகைய ஆற்றல் மற்றும் ஆளுமை மிக்க அவர்கள் அடக்குமுறையின் அச்சம் காரணமாக சனத்தொகையில வீழ்ச்சி ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்று திடமாக நம்பலாம்.எனவே சனத்தொகை வீழ்ச்சிக்கும் அடக்குமுறையால் ஏற்படும் அச்சத்துக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகின்றேன்.இதனைப் போன்றே பெண்ணடிமைத்தனமும் சனத்தொகை வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியதாக கூறுவதற்கில்லை.

எவ்வாறெனினும் இம்மக்களின சர்வதேச நாடுகளை நோக்கிய இடப்பெயர்வு, திருமண வயதுகளில் ஏற்படும் தாமத நிலை போன்ற நிலைமைகள் ஈழத் தமிழ் மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு மேலும் ஏதுவாகி இருக்கக்கூடும் என்று நம்புவதற்கு இடமுள்ளதெனலாம்.

நேர்கண்டவர்: துரைசாமி நடராஜா

Leave a Reply