ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது-ஹர்ஷ டி சில்வா

வாழ்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

பாராளுமன்றில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினருக்கு செலவிடும் தொகையானது பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேவையற்ற செலவீனங்களை குறைத்து பொருளாதார மீட்சிக்கு அவதானம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டால் மாத்திரமே தலைவருக்கான கௌரவத்தை நாட்டு மக்கள் வழங்குவார்கள். நாட்டில் மேலும் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கான செலவீனங்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையில் தற்போது 60 அமைச்சர்கள் வரை பதவியில் உள்ளார்கள்.

மேலும் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கினால் அமைச்சர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வாகனங்கள், அதற்கான எரிபொருள் செலவீனம், அமைச்சர்களுக்கான நிர்வாக சேவையினருக்கு வேதனம், இவை அனைத்தையும் நோக்கும் போது இந்த பாதீடானது மக்களுக்கு அனுகூலமான பாதீடு அல்ல என்பது புலனாகின்றது.

அது மாத்திரமின்றி சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது.

மேலும் பணவீக்க அதிகரிப்பின் வேகம் குறைவடைந்துள்ள போதிலும், பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போது உணவு பணவீக்கமானது நூற்றுக்கு ஐந்து வீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது நூற்றுக்கு 95 வீதமாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. எனினும் உணவு பணவீக்கமானது தற்போது சீராக உள்ளதாகவும், ஆகையினால் வாழ்வதற்கு ஏற்றச்சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் பொருளாதார கணிப்பினை கேட்டுச் சிந்திக்கும் போது நகைச்சுவையாகவே இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.