திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்

385 Views
இலக்கு மின்னிதழ் 140இற்கான ஆசிரியர் தலையங்கம்

தலையங்கம் 3 திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்

கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல் வழித் துறைமுக இணைப்பு வழி உலகைத் தனது மனித வளத்துடனும், இயற்கை வளத்துடனும் இணைத்து எழுதல் என்ற அற்புதமான திட்டத்தை இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் வெற்றிகரமாக முன்னெடுத்து, உலக நாடுகள் பலவற்றிலும் சீனா முதலீட்டு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டு வழி அரசியல் இணைப்பு பெறும் அரசியல் தந்திரோபாயத்தை அமெரிக்கா தனது முதலீட்டாளர்கள் மூலம் செய்வித்துத் தான் சீனாவுக்குச் சமானமான வெற்றி யினைப் பெறுவதற்கான பயணத்தை கோவிட் 19 இன் பின்னர் ஆரம்பித்துள்ளது. உலக வல்லாண்மை நிலையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அமெரிக்காவுக்கு இது தவிர்க்கப்பட முடியாத கால தேவையாகவும் உள்ளது.

இந்த ‘முதலீட்டால் வையத்தில் முந்தியிருத்தல்’ என்னும் புதிய அரசியல் வியூகத்தின் தொடக்க முயற்சிகளில் ஒன்றாகத் திருகோணமலையை மையமாக வைத்து உலக அரசியலைத் தன்பக்கம் சுழற்றுவதற்கான ஒரு முயற்சியிலும் அமெரிக்கா இறங்கி யுள்ளது எனத் தெரிய வருகிறது. அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலமாக ‘மூவாயிரம் மில்லியன் டொலர்களுக்குத் திருகோணமலைத் துறைமுகத்தை ஐந்து ஆண்டு களுக்குக் குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளுதல்’ என்பதற்கான பேரம் பேசுதல்கள், கோவிட் 19இற்குப் பின்னரான புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தோற்றுவிக்கும் செயற்பாட்டின் மௌன நாடகமாக பசில் ராசபக்ச என்ற சிறீலங்காத் தரப்புக் கதாநாயகனின் வழி இயக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இன்று அந்தக் கதாநாயகனான தனது தம்பி பசில் ராசபக்சவையே சிறீலங்காவின் நிதியமைச்சராக அண்ணன் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா  ராசபக்ச அமர்த்தி, “ஒரு புறம் சீனா மறுபுறம் அமெரிக்கா இரண்டுக்கும் நடுவே நான் இருக்கிறேன்” என்று சிவத்திற்கும் சக்திக்கும் நடுவில் தான் இருப்பதாகப் பாண்டிய அமைச்சர் மாணிக்கவாசகர் பாடியது போல, புதிய பக்திப் பண்ணிசைத்து மகிழ்கின்றார். அண்ணன் காட்டிய வழியம்மா என “என் கடன் பணி செய்து கிடப்பதே” என பசில் ராசபக்ச இராமனுக்குப் பரதனாக, அண்ணா இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக் காலத்திலும் வெற்றி பெற்று முடிசூடத் தன் குடும்பப் பணியினை அண்ணனின் கால் அணியைப் பரதனைப் போல் கண்ணில் ஒற்றித் தலையில் சுமக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த வெற்றிக் களிப்பில் “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்ற வீரத்துடன் அண்ணன் சிறீலங்கா அரச அதிபர்  கோத்தபாயா  ராசபக்ச இப்போது மூன்று ஆண்டு திட்டங்களாக உள்ள தனது அரச அதிபர் அலுவலகச் செயற்திட்டங்களின், மேற்கால எல்லை எட்டு வருடம் எனத், தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையிலேயே ஊடகங்களுக்கு முன்மொழியத் தொடங்கி விட்டார். இது குடும்ப ஆட்சி நீடிப்பு மகிழ்ச்சி அறிவிப்பாக மட்டும் அமையாது தனது அரசாங்கம் உறுதியான அரசாங்கமென உலக முதலீட்டாளர்களுக்கு உறுதிப்படுத்தி சிறீலங்காவுக்கான அனைத்துலக முதலீட்டைப் பெருக்கும் அரசியல் தந்திரேபாயமாகவும் அமைகிறது.

சீனாவிடம் இருந்து சீனப் பணமாகிய யுவானில் பெற்ற பெருங்கடன் தொகையை அமெரிக்க டொலர்களாக மாற்றி, உலகச் சந்தையில் திரவ நிலைக்குக் கொண்டு வந்து, நாளாந்த சந்தைக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய இயலாது ‘வங்குரோத்து’ அரசாகத் தன்னை அறிவிக்கும் அபாய நிலைக்குச் சென்று கொண்டிருந்த சிறீலங்காவுக்கு, 60 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவுக்குச் சமானமான மூவாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய மாற்றம் செய்யக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சிறீலங்கா தவறவிடாது, தக்க வைத்துக் கொள்ள தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்யும் என்பது அனைவராலும் எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

அதே வேளை அமெரிக்க சார்பான பொருளாதார முதலீட்டுப் பெருக்கம் என்பது உலக வங்கி, நாணயமாற்று வங்கி போன்றவற்றின் கடனுதவிகளையும், முதலீட்டு உதவிகளையும் மீளவும் பெறும் வழியாகவும், ஐரோப்பிய ஒன்றியப் பாராளு மன்றத்தின் வரிச் சலுகைக்கான முன் நிபந்தனையாக வைக்கப் பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் என்பதைச் செய்யாமலே தனக்கான நிதி வளத்தை சிறீலங்கா நிலை நிறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம்,  சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா ராசபக்சவும் அவரது ஆணையில் செயற்பட்ட படையினரும் இழைத்த அனைத்துலகக் குற்றச் செயல்களுக்கான  அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கான உத்தியாகவும் அமைகிறது.

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துப் பழகிய ராசபக்ச குடும்பத்தினர் இப்போது ஒரு கல்லில் நான்கு மாங்காய்களை வீழ்த்தும் அற்புத விற்பன்னர்களாகப் பரிணமித்து  ள்ளனர். முதல் மாங்காய், அமெரிக்க டொலர் பற்றாக் குறையையும் பஞ்சாகப் பறந்து போகச் செய்து ‘வங்குரோத்து’ நிலையிலிருந்து தப்பித்தல். இரண்டாவது மாங்காய், சிறீலங்காவில் சீனாவின் மேலாதிக்கம் நடை முறை வாழ்வாகிறது. தங்களின் பௌத்த சிங்கள மகாவம்ச சிந்தனைகள் தளர்கின்றன எனத் தவித்த பௌத்த பிக்குகளுக்கு, இனி சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் புத்தசாசனத்தின் பாதுகாப் பாளர்கள் என உறுதிப்படுத்தி, சிங்கள மக்களின் எதிர்ப்புக்குத் தப்புதல்.   மூன்றாவது மாங்காய், திருகோணமலையில் உள்ள இந்தியாவின் எண்ணெய்த் தாங்கி முதலீடுகளின் வருமானங்களைப் பலவீனப் படுத்தி, அங்கிருந்து தானாகவே ஒட வைப்பதன் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2015ஆம் ஆண்டின் இலங்கை வருகையின் போது திருகோண மலையை தெற்காசிய எண்ணெய்க் கேந்திர நிலையமாக்குவோம் என உலகுக்கு உரைத்த சூளுரையை கனவாக்கி, இந்தியாவின் பிராந்திய வல்லாண்மையை இழக்க வைத்தல் என்னும் கனவை நனவாக்குதல். நான்காவது மாங்காய் ராசபக்ச குடும்பத்தினரதும் அவர்களது ஆணையில் செயற்பட்ட படையினரதும் அனைத்துலகக் குற்றச் செயல் விசாரணை களுக்குத் தப்பிப் பிழைப்பது என்பதாகிறது.

இந்த மகிந்த ராசபக்ச குடும்ப ஆட்சி மையத்தின் மிக உயர் இராஜதந்திர வலைப்பின்னல் என்பது சுருக்கமாகச் சொன்னால், ஈழத் தமிழின அழிப்புக்களை நியாயப்படுத்தி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற சிங்கள பௌத்த சர்வாதிகார நாடாக இலங்கைத் தீவை மாற்றுவது என்பது எல்லா வகையிலும் தெளிவாகிறது. இதற்கு இந்தியாவும், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களும் என்னும் நான்கு பங்காளர்களும் ஒருமித்து எடுக்கக் கூடிய பதில் நடவடிக்கையே, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தக்க வைக்கக் கூடிய ஒரே ஆற்றலாக அமையும் என்பதே இலக்கின் கருத்து.

Leave a Reply