‘இறையாண்மை மீதான மரியாதையில் தான் உலக அமைதி இருக்கிறது’- ஐ.நாவில் இந்தியா கருத்து

“இறையாண்மை மீதான மரியாதையில் தான் உலக அமைதி இருக்கிறது. பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் படைகளைப் பயன்படுத்தும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது“ என இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்.

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பரஸ்பரம் மரியாதை கொடுங்கள் என்று உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டம் “பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மூலம் பொது பாதுகாப்பை உறுதி செய்வோம்“ என்ற தலைப்பில் நேற்று  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ்  உரையாற்றுகையில்,

“இறையாண்மை மீதான மரியாதையில் தான் உலக அமைதி இருக்கிறது. பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் படைகளைப் பயன்படுத்தும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமைப்பில் சில சீரமைப்புகள் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஐ.நா.வின் உரிமைகளுக்கே சிக்கல் ஏற்படலாம்.

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பரஸ்பரம் மரியாதை கொடுங்கள் என்று உலக நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம். பொது பாதுகாப்பு என்பது உலக நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியப்படும். சர்வதேச சர்ச்சைகளுக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அதுபோலவே எல்லைப் பிரச்சினைகள் நாடுகள் தங்களுக்கு இடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும். இருதரப்பு ஒப்பந்தமோ அல்லது பலதரப்பு ஒப்பந்தமோ அதை மதித்து நடக்க வேண்டும். தன்னிச்சையாக ஒரு தரப்பு மட்டும் அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளுக்கு இன்னும் அதிகமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். இன்னும் ஜனநாயகம் மிக்க அமைப்பாக இதனை மாற்ற வேண்டும். ஆப்பிரிக்க கண்ட நாடுகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர பிரதிநித்துவம் கொடுக்க வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.