முன்னாள் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டிய சிறப்புரிமைகள் கோட்டாபயவுக்கும்  வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு  பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ரோஹினி மாரசிங்க மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டரீதியாக உரிமையுள்ள பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் இல்லாமல் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்ப முடியாது என முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , அக்கடிதத்தில் அரசியலமைப்பின் சரத்துகளை மேற்கோள் காட்டி, எந்தவொரு குடிமகனும் தனது நாட்டிற்கு திரும்புவதற்கு அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முன்னாள் ஜனாதிபதிக்கு நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், கோட்டாபய ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்களும் நாடு திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும்  பரிந்துரை செய்வதாகவும் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.