பதவியில் தொடர்வதற்காக ரணில் வகுக்கும் உபாயம்-அகிலன்

112 Views

நெருக்கடியான ஒருகாலகட்டத்தில் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அவருக்கு இருக்கக்கூடிய பதவிக்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்வரா என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுந்திருந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்தன.

முதலாவது: பாராளுமன்றத்தில் ஆதரவற்ற நிலை – அதாவது அவரது கட்சியில் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர்தான். இரண்டாவது: காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் ரணிலுக்கு எதிரான போராட்டத்தையும் தீவிரப்படுத்தியிருந்தார்கள். மூன்றாவது: நாட்டின் பொருளாதார நிலைமை உடனடியாகச் சீரடையக்கூடிய ஒன்றாகக் காணப்பட்டிருக்கவில்லை. நான்காவது: பிராந்திய சர்வதேச ரீதியான நெருக்கடிகள். இவை காரணமாக கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும் ரணில் விக்கிரமசிங்க  அவருக்குக் கிடைத்த பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்திசெய்யக் கூடியவராக இருப்பாரா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டது.

ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது, “அவர் மக்கள் ஆணையைப் பெறாத ஒருவர். அவர் பதவி விலகி புதிய தேர்தலை நடத்தவேண்டும்” என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. என்பன கோரிக்கை முன்வைத்திருந்தன. ஆனால், பதவியேற்று சுமார் ஒரு மாத காலத்துக்குள்ளாகவே இந்த நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் ரணில் வெற்றிபெற்றிருக்கின்றார். மக்களின் ஆணையைப் பெறாமல் வந்தவர் என்ற கருத்துக்கு அப்போதே ரணில் பதிலளித்திருந்தார்.

இரண்டாம் உலகப் போரின்பின்னர் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பிரித்தானியாவில் நடைபெற்றதை அவர் உதாரணமாகக் கூறியிருந்தார். இப்போது, தனது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் – மற்றொரு தவணைக்கு அதாவது 2024 இல் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாவதற்கான உபாயம் ஒன்றையும் அவர் வகுத்துச் செயற்படுகின்றார் என்பதை உணரமுடிகின்றது.

ராஜபக்சக்களின் ஆதரவு

பாராளுமன்றத்தில் தனது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு ஆசனம் மட்டும் உள்ளநிலையில், அரசாங்கத்தை நடத்துவதற்கு ரணில் தடுமாறுவார் எனச் சொல்லப்பட்ட போதிலும், பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அரசாங்கத்தை ஸ்திரமான முறையில் கொண்டு செல்ல முடியும் என்பதை ரணில் இந்த ஒரு மாத காலத்தில் உணர்த்தியிருக்கின்றார். இது பரஸ்பர தேவையின் அடிப்படையிலான ஒரு செயற்பாடாகும்.

‘அரகலய’ எனப்படும் மக்கள் போராட்டத்தினால் உருக்குலைந்து போனது ராஜபக்சக்களின் அரசியல்தான். அத்துடன் பொதுஜன பெரமுனையும் இதனால் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இந்த நிலையில் சில காலத்துக்கு தமது இருப்பைப் பாதுகாப்பதற்கு உதவக்கூடியவராக ரணில் இருப்பார் என ராஜபக்சக்கள் சரியாகத்தான் மதிப்பிட்டிருந்தார்கள். மறுபுறத்தில் கடந்த பொதுத்தேர்தலில் ஒரேயொரு ஆசனத்துடன் படுதோல்வியைச் சந்தித்த ரணிலுக்கும், அவரது கட்சிக்கும் புத்துயிர் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது போயிருந்தால் ரணிலின் அரசியல் அஸ்தமனமாகியிருக்கும்.

ஆக, இரண்டு தரப்புக்களுக்குமே ஒருவரை ஒருவர் ஆதரிக்கவேண்டிய பரஸ்பர தேவை உள்ளது. அதனால் முரண்பாடுகள் உருவானாலும் புரிந்துணர்வின் அடிப்படையில் அதனைத் தீர்த்துக்கொள்ளக்கூடியவர்களாகவே ரணிலும் ராஜபக்சக்களும் உள்ளார்கள். இந்த உறவு முறியுமாக இருந்தால் இருதரப்பினரது அரசியல் எதிர்காலத்துக்கும் அது சமாதி கட்டுவதாக அமைந்துவிடும். அரகலிய போராட்டத்தினால் தமது கட்சிக்கான மக்கள் செல்வாக்கு எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றது என்பது மொட்டு அணிக்குத் தெரியும். அதனால், பெரும்பாலான விடயங்களில் அடக்கி வாசிக்க வேண்டிய தேவை அவர்களுக்கும் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்

மொட்டுவின் பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டுதான் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பது ரணிலுக்குத் தெரிந்துதான் இருக்கின்றது. ஆனால், மொட்டு தனக்கு எதிராகச் செயற்படாது என ரணில் கணிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக திடீர்த் தேர்தல் ஒன்றைச் சந்திக்க மொட்டு தயாராகவில்லை. அரகலய போராட்டத்தினால் ராஜபக்சக்களின் நற்பெயர் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனைப் புனரமைக்க சில காலம் செல்லும் என்பது ராஜபக்சக்களுக்கும் தெரியும் ரணிலுக்கும் தெரியும். ஜனாதிபதி என்ற முறையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் அடுத்த வருடம் ரணிலின் கைகளுக்கு வந்துவிடும். இது மொட்டுவுக்கு அச்சுறுத்தல்.

‘அரகலய’ போராட்டம் பெருமளவுக்கு ஒடுக்கப்பட்டுவிட்டாலும், அது முழுமையாக இல்லாமல் போகவில்லை. அது உயிர்துடிப்புடன் இல்லாவிட்டாலும், அது உயிருடன்தான் உள்ளது. ரணிலும் அதனைத்தான் விரும்புகின்றார். ராஜபக்சக்கள் அவர்களிடமுள்ள பாராளுமன்றப் பலத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிராகச் செயற்படுவதற்கு முற்பட்டால் மீண்டும் ‘அரகலய’ தூண்டிவிடுவதற்கான மறைமுகமான திட்டம் ஒன்று ரணிலிடம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கருதுகின்றன. ராஜபக்சக்களை கைக்குள் வைத்திருப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டாக அரகலயவை ரணில் பயன்படுத்தலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

இதனைவிட ராஜபக்சக்கள் தரப்பில் காணப்படும் உள்ளக முரண்பாடுகள், அதிகாரப்போட்டிகளைப் பயன்படுத்திக்கொண்டு 2024 இறுதியில் நடைபெற வேண்டிய ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவதற்கான திட்டம் ஒன்றும் ரணிலிடம் உள்ளதாகத் தெரிகின்றது. இந்தத் தேர்தலை ரணில் விரும்பினால் ஒரு வருடம் முன்கூட்டியே நடத்தவும் முடியும். மொட்டுவின் பிதாமகரான மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில் தனது சகோதரர்களில் எவரையும் இன்னொரு ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க அவர் தயாராகவில்லை. கோட்டாபயவுடன் பெற்றுக்கொண்ட அனுபவம் போதும் என அவர் நினைக்கிறார். பஸில் ராஜபக்சவுக்கு ஜனாதிபதிக் கனவு இருந்தாலும் அவரைக் களமிறக்குவது ‘அரகலய’ போராட்டத்தைவிட மோசமான நிலையை ஏற்படுத்திவிடும் என்பது மகிந்தவின் கணிப்பு. ஏனெனில் பஸில் மீதும் அதிகளவு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

நாமலுக்கு அவசரமில்லை

இந்த நிலையில் அவரது தெரிவு அவரது ‘இளவரசர்” நாமல் ராஜபக்சதான். ஆனால், 2023 இல் அல்லது 2024 இல் நடைபெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் நாமலை களமிறக்க மகிந்த விரும்பவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. அரகலய போராட்டத்தின் சூடு தணியாத நிலையில் நாமலை களமிறக்குவது ஆபத்தானதாகிவிடலாம் என்பது முதலாவது காரணம். நாமலுக்கு மேலும் அனுபவம் – முதிர்ச்சி தேவை என்பது இரண்டாவது காரணம்.

ராஜபக்ச குடும்பத்தை சாராத ஒருவரை களமிறக்க முற்பட்டால் கட்சியையே இழக்க வேண்டிய நிலை வரலாம் என்ற அச்சமும் மகிந்தரிடம் உள்ளது. சுதந்திரக் கட்சியை மைத்திரியிடம் பறிகொடுத்தது இதில் அவருக்கு நல்ல அனுபவம். அதனால், ராஜபக்ச குடும்பத்தை சாராத எவரையும் மொட்டு கட்சியின் சார்பில் அவர் களமிறக்கமாட்டார்.

இவ்வாறான பின்னணியில் மீண்டும் ஒரு முறை ரணிலை ஜனாதிபதியாக்கி -ரணிலின் அடுத்த பதவிக்காலத்தின் முடிவில் நாமலை களமிறக்கலாம் என மகிந்தர் சிந்திப்பதாகத் தெரிகின்றது. தற்போது காணப்படும் அரசியல் சூழ்நிலையில் கட்சியைக் காப்பாற்றுவதற்கும், கட்சித் தலைமையை பாதுகாப்பாக தமது வாரிசான நாமலிடம் ஒப்படைப்பதற்கும் இவ்வாறான ஒரு உபாயத்துடன்தான் மகிந்த சிந்திப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணிலுக்கு அதிர்ஸ்டம்?

கடந்த ஜூன் 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைத் துறக்கும் வரையில் அதிர்ஸ்டற்ற ஒருவராகவே ரணில் கருதப்பட்டார். ஆனால், அதற்குப் பின்னர் சஜித் பிரேமதாசவின் தயக்கத்தின் காரணமாகவும், மாற்றமடைந்த அரசியல் நிலைமைகளாலும் ரணிலுக்கு வெள்ளி திசை ஆரம்பமாகியுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து அவர் இராஜ்ஜியம் ஒன்றை அமைத்துக்கொண்டமைக்கு அதிஸ்ட்டம் மட்டும் காரணமல்ல. அரசியல் கள நிலைமைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ற அவரது நிதானமான காய்நகர்த்தல்களும் இதற்குக் காரணம்.

அரகலிய போராட்டம் கலைந்துபோனமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று: அதற்கு எதிராக ரணில் முன்னெடுத்த ஒடுக்குமுறைகள். படைகளையும், சட்டங்களையும் அவர் கடுமையாகப் பயன்படுத்தினார். மனித உரிமைகள் குறித்த கரிசனைகளை கவனத்திற்கொள்வதாகச் சொல்லிக்கொண்டே அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார். இரண்டாவது: போராட்டம் தீவிரமடைவதற்கு காரணமாக இருந்தது அத்தியவசியப் பொருட்களுக்கான விலை உயர்வும், அவற்றுக்குக் காணப்பட்ட தட்டுப்பாடும். இவைதான் மக்களை வீதியில் இறக்கியது. ரணில் அதிகாரத்துக்கு வந்த பின்னர் தட்டுப்பாடு பெருமளவு குறைந்திருக்கின்றது. விலைவாசியும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இந்த நிலையில் மக்கள் சீற்றமடைந்து வீதிகளில் இறங்குவதற்கான காரணங்கள் இல்லாமல் போயுள்ளன. ரணிலின் செல்வாக்கை இது ஓரளவு அதிகரித்திருக்கின்றது.

அரசியல் ரீதியாக சர்வகட்சி அரசு என்பது இப்போது இல்லாமல் போயுள்ளது. தேசிய அரசை அமைக்கப்போவதாக ரணில் இப்போது சொல்கின்றார். இதனைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளை முன்வைத்து எதிரணியினரை பிளவுபடுத்தும் உபாயம் ஒன்றை ரணில் இப்போது முன்னெடுக்கின்றார். இதனால் எதிரணிகள் பலவீனப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அடுத்த வருடத்தில் – அதாவது ஒரு வருடம் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை மொட்டு அணியின் ஆதரவுடன் நடத்தினால், சஜித் தடுமாறுவார். ரணிலுக்கான வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கும். மேற்கு நாடுகளும் இதனை விரும்பலாம்.

Leave a Reply