‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவில் தொடரப்படுகிறது வழக்கு – மொழியாக்கம்: ஜெயந்திரன்

503 Views

தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்?‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவின் ( Burkina Faso) அன்றைய அதிபராகத் திகழ்ந்த தோமஸ் சங்கரா (Thomas Sankara) கொல்லப்பட்ட அந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு நிகழ்ந்து சரியாக 34 ஆண்டுகள் நிறைவுபெறுகின்ற இத்தருணத்தில், ‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ என அழைக்கப்பட்ட அந்த மனிதரின் கொலையுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 14 பேர் ஒரு வழக்கை எதிர்கொள்ளுகிறார்கள்.

சங்கராவைக் கொலைசெய்தது யார்3 ‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவில் தொடரப்படுகிறது வழக்கு - மொழியாக்கம்: ஜெயந்திரன்அனைவரையும் கவர்ந்திழுக்கும் இயல்பைக் கொண்டவரும், ‘ஆபிரிக்கர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்’  என்ற கொள்கையைக் கொண்டவருமான சங்கரா, 37 வயதில் 15-10-1987 அன்று முன்னெடுக்கப்பட்ட ஒரு சதிமுயற்சியில், இராணுவ வீரர்களால் கொல்லப்பட, அவரது மிக நெருங்கிய நண்பரான பிளேஸ் கொம்பாவோரே (Blaise Compaore) அதிபர் பதவிக்கு உயர்ந்தார். அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இருவரும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற சங்கரா அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேருள் கொம்பாவோரேயும் ஒருவர். ஆனால் அவர் நாட்டை விட்டுத் தப்பியோடி, தற்போது ஐவரி கோஸ்ட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 2014ம் ஆண்டு மக்கள் மேற்கொண்ட பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் காரணமாகப் பதவியிலிருந்து இறங்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். தனக்கும் சங்கராவின் கொலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மறுத்து வரும் கொம்பாவோரே வழக்கிலும் பங்கெடுக்காது தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்.

 “இதற்காக மிகவும் நீண்டகாலமாகவே நான் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று முன்னைய அதிபரின் மனைவியான மரியம் சங்கரா (Mariam Sankara) பிபிசி ஊடகவியலாளரிடம் கூறினார். “இதிலே யார் என்ன செய்தார்கள் என்ற உண்மையை அறிந்துகொள்ள நான் விரும்புகிறேன்.”

ஆபிரிக்கா எங்குமே அனைவராலும் நினைவுகூரப்படும் ஒருவராகவே சங்கரா இருந்துவருகிறார். அவரது முகத்தைக் கொண்டிருக்கும் ஸ்ரிக்கர்கள் டாக்சிகளில் ஒட்டப்பட்டிருப்பதை மேற்கு ஆபிரிக்கா முழுவதும் காணலாம். அதே நேரம் தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை, அடிப்படையான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்ற எதிர்க்கட்சித் தலைவரான ஜூலியஸ் மலேமா Julius Malema) தான் பின்பற்றும் தலைவர்களில் சங்கராவும் ஒருவர் எனத் தெரிவிக்கிறார்.

ஒரு நாயகனாக சங்கரா மதிக்கப்படுவதற்கான காரணம் என்ன?

 “எம்மைப் பொறுத்த வரையில் சங்கரா எமது தேசத்தை நேசித்த ஒரு மனிதர். ஆபிரிக்காவை அவர் நேசித்தார். எங்களுக்காக அவர் தனது உயிரைக் கொடுத்தார்” என்று தோமஸ் சங்கரா நினைவுக் குழுவின் செயலாளர் நாயகமான லூக் தமீபா (Luc Damiba) தெரிவித்தார்.

அவர் அதிபராக இருந்த காலத்தில் தான் ‘மேல் வோல்ற்றா’ (Upper Volta) என்று முன்னர் அழைக்கப்பட்ட எமது நாட்டுக்கு புர்க்கீனா பாசோ (Burkina Faso) என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. ‘மாண்புமிக்க மனிதர்கள் வாழும் தேசம்’ என்பது அதன் பொருள்.

சங்கராவைக் கொலைசெய்தது யார்4 ‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவில் தொடரப்படுகிறது வழக்கு - மொழியாக்கம்: ஜெயந்திரன்ஆடம்பரமற்றவராகவும் அதிகம் செலவுசெய்யாமல் சிக்கனமாக வாழும் ஒருவராகவும் சங்கரா திகழ்ந்தார். அரச ஊழியர்கள் சாரதிகளைப் பயன்படுத்தும் நடைமுறையை ஒழித்தது மட்டுமன்றி, அரச ஊழியர்கள் முதல் வகுப்பில் விமானப்பயணங்களை மேற்கொள்ளும் நடைமுறையையும் இல்லாதொழித்தார்.

தனது சகோதரனைப் பார்க்க அதிபர் மாளிகைக்குச் சென்றிருந்த வேளையில், தமக்கு அவரையே (beans) உணவாகத் தரப்பட்டதாக தோமஸ் சங்கராவின் சகோதரரான வலன்ரைன் (Valentin) தெரிவித்தார்.

கல்விக்கு சங்கரா மிகவும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அதிபராக இருந்த காலத்தில், 1983ம் ஆண்டில் 13 வீதமாக இருந்த கல்வியறிவு வீதம், 1987 இல் 73 வீதமாக உயர்ந்தது. அத்தோடு நாடு பூராவும் ஒரு தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் அவர் முன்னெடுத்தார்.

கிராமங்களின் தலைவர்களாக இருந்தவர்களிடம் காணிகளை வாங்கி, ஏழை விவசாயிகளுக்கு அவற்றைப் பகிர்ந்தளித்தார். இதன் காரணமாக பருத்தி உற்பத்தியில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது.

 ‘ஆபிரிக்கா ஒன்றுபடவேண்டும்’ என்று அழைப்பு விடுத்த சங்கரா, பன்னாட்டு நாணய நிதியம் (International Monetary Fund)  உலக வங்கி (World Bank) போன்ற நவகாலனீய நிறுவனங்களுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டார்.

“உங்களுக்கு உணவை வழங்குபவர்கள் உங்களைத் தமது கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்” என்று ஒருமுறை சங்கரா உரையாற்றியிருந்தார்.

சங்கராவைக் கொலைசெய்தது யார்5 ‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவில் தொடரப்படுகிறது வழக்கு - மொழியாக்கம்: ஜெயந்திரன்தமக்குக் கீழே காலனீய நாடுகளாக இருந்த புர்க்கீனா பாசோ போன்ற ஆபிரிக்க நாடுகள் மேல் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டிய பிரான்சுக்கு சவாலாக விளங்கிய ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையை சங்கரா கைக்கொண்டிருந்தார்.  தனது கணவரின் கொலையைத் நுட்பமாகத் திட்டமிட்டு நெறிப்படுத்தியதாக பிரான்சு நாட்டின் மீது அவரது மனைவி மரியம் குற்றஞ்சாட்டினார்.

 “இன்றும் அவர் தான் எனது அதிபர். எமது மக்களுக்காக அவர் செய்த விடயங்கள் என் போன்ற இளையோரை அவர் செய்தது போலச் செய்யத் தூண்டுகின்றது.” என்று உவாகாடௌகூவில் (Ouagadougou) உள்ள பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பிபிசிக்குத் தெரிவித்தார்.

சங்கரா நினைவுப் பூங்காவில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஆறு மீற்றர்கள் உயரமான சங்கராவின் வெண்கலச்சிலை, உவாகாடௌகூவில் உள்ள சங்கரா நினைவுப் பூங்காவில் 2019ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. சிலர் மேற்கொண்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து அந்தச் சிலை கடந்த வருடம் திருத்தியமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட பூங்காவும் சிலையும் உல்லாசப்பயணிகள் அதிகம் செல்லும் இடமாக இன்று திகழ்வதைக் காணலாம்.

குறிப்பிட்ட இந்தப் பூங்காவை மேலும் பெருப்பிக்கும் திட்டம் இருப்பதாகவும், உவாகாடௌகூவை நோக்கிய படி 87 மீற்றர்கள் உயரமான கோபுரம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட இருப்பதாகவும் தமீபா தெரிவித்தார்.

சங்கராவைக் கொலைசெய்தது யார்1 ‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவில் தொடரப்படுகிறது வழக்கு - மொழியாக்கம்: ஜெயந்திரன்சங்கராவின் கல்லறையை உள்ளடக்கிய பெரும் நினைவு மண்டபம் கட்டப்பட இருப்பதாகவும் அத்தோடு ஒரு திரையரங்குக்கும் ஊடக நூல்நிலையம் ஒன்றுக்கும் அவரது பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சங்கராவின் எண்ணங்களை எதிர்காலச் சந்ததிக்கு எடுத்துச் செல்ல இந்த முயற்சிகள் உதவும் என்பது அவரது கருத்து.

சங்கராவை விமர்சிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சங்கராவின் தீவிர இடதுசாரிக் கொள்கைகள் கொடுமையானவை என்று மனித உரிமை அமைப்புகள் விமர்சிக்கின்றன. சங்கராவின் அரசியல் எதிரிகள் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக 1986இல் பன்னாட்டு மன்னிப்புச்சபை (Amnesty International) வெளியிட்ட அறிக்கை ஒன்று குற்றஞ்சாட்டியது.

சங்கராவின் நெருங்கிய நண்பராக இருந்த பிளேஸ் கொம்பாவோரே சங்கராவின் கொலைக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனக் கூறுகின்றார்.

 “சனநாயகத்தின் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது என்பது மட்டுமன்றி அவரை எதிர்த்தவர்களால் அவரோடு உரையாட முடியவில்லை. அவர்களது கதையை அவர் கேட்கவும் இல்லை” என்று சங்கராவின் அரசில் தகவல்துறை அமைச்சராகப் பணியாற்றிய சேர்ஜ் தியோபீல் பலீமா (Serge Theophile Balima) கூறினார்.

மக்களுக்கு அதிகாரத்தை வழங்க அவர் விரும்பினார். ஆகவே பொதுவாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அறநெறிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ‘புரட்சிப் பாதுகாப்புக் குழுக்களுக்கு’ தலைமை வகித்த சாதாரண மக்களுக்கு அவர் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தார். இவ்வாறாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் பலவிதமான துஸ்பிரயோகங்களை மேற்கொண்டதன் காரணத்தினால் அவரது அதிகாரத்துக்குக் களங்கம் ஏற்பட்டது.

சங்கராவைப் பொறுத்த வரையில் எல்லோருமே ‘தத்தம் நலன்களால் தூண்டப்பட்டவர்கள்’ என்ற கொள்கையை உடையவர்’ என்றும் அரசியலில் மாக்கியாவெல்லியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் என்றும் சங்கராவினால் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் அதிபரான ஜோன் பப்ரிஸ்ட் உவெட்ராவோகோ (Jean-Baptiste Ouedraogo)‘ஆபிரிக்க அறிக்கை’ (Africa Report) என்ற இணையத்தளத்துக்கு 2020 இல் வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீண்ட காலம் எடுப்பதற்கான காரணம் என்ன?

“இருபத்தேழு வருடங்களாக நீடித்த பிளேஸ் கொம்பாவோரேயின் ஆட்சிக்காலத்தில் இதற்காக நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம்” என்று சங்கராவின் சகோதரரான போல் சங்கரா தெரிவித்தார். அவரது ஆட்சியில் இந்த வழக்கு நடைபெறும் என்ற கனவு கூட எங்களுக்கு இருக்கவில்லை.

சங்கராவின் கொலை தொடர்பாக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவரது மனைவி 1997இல் தனது கணவரின் கொலை தொடர்பாகக் குற்றவியல் முறைப்பாடு ஒன்றைக் கையளித்திருந்தார். ஆனால் விசாரணை தொடரப்பட முடியும் என்று தீர்ப்பிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு 15 வருடங்கள் எடுத்திருக்கிறது.

கொம்பாவோரே 2014இல் பதவி கவிழ்க்கப்படும் வரையும் இவ்வழக்குத் தொடர்பாக எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்கு அடுத்த வருடம் அவரது எனக்கருதப்பட்ட உடல் தோண்டியெடுக்கப்பட்டது. ஆனால் அந்த உடல் சங்கராவின் உடல் தான் என்பதை டிஎன்ஏ சோதனையால் உறுதிப்படுத்த முடியவில்லை.

சங்கராவின் கொலை தொடர்பான இராணுவ ஆவணங்களை வெளியிடுமாறு, 2016ம் ஆண்டில் புர்க்கீனா பாசோவின் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக பிரெஞ்சு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

குறிப்பிட்ட அந்த ஆவணங்களை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டு, மூன்று கட்டங்களாக அந்த ஆவணங்கள் புர்க்கீனா பாசோவுக்கு அனுப்பப்பட்டன. கடைசியாக 2021 ஏப்பிரலில் ஆவணங்கள் பிரான்சில் இருந்து அனுப்பப்பட்டன.

வேறு யார் மேல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது?

கோம்பாவோரேயின் அரசில் அதிகாரிகளுக்குப் பொறுப்பாக இருந்த ஜெனரல் ஜில்பேட் டியென்டேரேயும் (General Gilbert Diendere) இன்னும் பதினொரு பேரும் இராணுவ நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரச பாதுகாப்பின் மேல் தாக்குதலைத் தொடுத்தல், சங்கராவின் கொலையுடன் தொடர்புபட்டிருத்தல், உடல்களை மறைத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன. 2015இல் முன்னெடுக்கப்பட்ட தோல்வியடைந்த ஒரு சதிமுயற்சியில் வகித்த பங்குக்காக 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட டியேன்டேரே ஏற்கனவே சிறையில் இருக்கிறார்.

முன்னாள் அதிபர் சங்கரா இயற்கைக் காரணங்களினாலேயே இறந்தார் என்று கூறிய மரணச் சான்றிதழில் ஒப்பமிட்ட மருத்துவரான டியேப்ரே ஜோன் கிறிஸ்ரோப்பும் (Diebre Jean Chistophe) குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். பொய்யான ஒரு ஆவணத்தை வழங்கினார் என்று குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

கொம்பாரோவின் முன்னைய பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்த ஹயசிந்த் கபாண்டோவும் (Hyacinthe Kafando) குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இன்னொருவர். ஏற்கனவே ஒரு பன்னாட்டுப் பிடிவிறாந்து இவருக்கு இருக்கிறது. சங்கராவையும் இன்னும 12 பேரையும் கொலை செய்த குழுவுக்குத் தலைமை தாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

எப்படிப்பட்ட தாக்கத்தை இந்த வழக்கு ஏற்படுத்தப் போகிறது?

அல்குவேடாவுடனும் இஸ்லாமிய அரசைத் தாபிக்க முயலும் குழுக்களோடும் தொடர்புபட்ட ஜிகாதிக் குழுக்களின் தாக்குதலை எதிர்கொள்ளும் புர்க்கீனா பாசோ நாட்டின் உறுதித்தன்மையை இந்த வழக்கு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

புர்க்கீனா பாசோ நாட்டில் இன்னும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தும் ஒருவராகவே கொம்பாவோரே பார்க்கப்படுகிறார். இராணுவத்தில் அவருக்கு ஆதரவானவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதற்குரிய சமிக்ஞைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு முற்றிலும் எதிர்மாறாக “நாட்டிலே மக்கள் நடுவில் தற்போது இருக்கின்ற பிரச்சினைகளைக் குறைத்து, தேசிய நல்லிணக்கத்தை இது ஊக்குவிக்கும்” என்று நாட்டின் தற்போதைய அதிபரான றோச் மார்க் கபோரே (Roche Marc Kabore) தெரிவித்தார்.

 “இப்படிப்பட்ட ஒரு வழக்கு நாட்டில் உறுதியற்ற தன்மையைத் தோற்றுவிக்கும் என்று நான் கருதவில்லை” என்று பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் சாஹெல் ஆய்வாளராகப் பணியாற்றுகின்ற மத்தியூ பெலரான் (Mathieu Pellerin)  ‘இளையோரின் ஆபிரிக்கா’ Jeune Afrique) என்ற சஞ்சிகைக்கு 2020 ஏப்பிரலில் தெரிவித்திருந்தார்.

“நீதி நிலைநாட்டப்படாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி.கொம்

1 COMMENT

  1. […] ‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவின் ( Burkina Faso) அன்றைய அதிபராகத் திகழ்ந்த தோமஸ் சங்கரா (Thomas Sankara)  […]

Leave a Reply