சட்டத்தை மீறாது நினைவேந்துவதற்கு எமக்கு உரிமையுண்டு – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

99 Views

நினைவேந்துவதற்கு எமக்கு உரிமையுண்டு

சட்டம் ஒழுங்கை மீறாத வகையில் நினைவேந்துவதற்கு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சட்டத்தை மீறாது நினைவேந்துவதற்கு எமக்கு உரிமையுண்டு என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின் பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மக்கள் பிரதிநிதிகளான எமக்கு எதிராக காவல் நிலையங்களால் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ் வழக்குகளில் மதகுருக்கள், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் காவல்துறையினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அச்சுவேலி காவல்துறையினரால் எனக்கும் உப தவிசாளருக்கும் எதிராகவும் வழக்கு இல (AR 1577/21) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கில், குற்றவியல் சட்டக்கோவை 106 இன் கீழும் பயங்கரவாதத் தடைச்சட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் மீறுகின்றோம். தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளை நினைவு கூரவுள்ளோம் எனவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

இதனை சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, திருக்குமரன், மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரனிகள் குழாம் மறுத்திருந்ததுடன் அரசியலமைப்பின் பிரகாரமாக நினைவேந்தல் உரிமையினை மறுக்கக் கூடாது எனவும் மன்றில் கேட்டுக்கொண்டது. அதேவேளை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் இவ்விடயத்தினை அணுகமுடியாது எனவும் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய  நீதிமன்றம், குற்றவியல் சட்டக்கோவையின் மேற்படி சரத்தின் பிரகாரம் குற்றம் இழைக்கப்பட்டதற்கான வலுவான சாட்சியங்கள் இணைக்கப்படவில்லை என்றும் அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவு கூர்வதற்கான உரிமையினை மறுக்க முடியாது என்றும் ஏற்கனவே வலுவில் உள்ள சட்ட ஏற்பாடுகளையும் வர்த்தமானி அறிவித்தல்களையும் சகலரும் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டத்தினை மீறினால் பொலிசார் கைது செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்கத்தின் கீழ் நினைவேந்துவது தடைசெய்யப்படவில்லை.

 எனவே சட்டத்தை மீறாத வகையில் நாம் நினைவேந்தலைச் செய்ய முடியும். எமது மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மீறிவிட வேண்டும் என்று செயற்படுபவர்கள் நினைவு கூறும் சுதந்திரத்தினைக் கூட அடக்கியாள வேண்டும் எனச் செயற்படுகின்றனர். அவற்றுக்கு மக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 சட்டத்தை மீறாது நினைவேந்துவதற்கு எமக்கு உரிமையுண்டு – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

Leave a Reply