மட்டக்களப்பு: வடிச்சல் பகுதியை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி தடுத்து நிறுத்தம்

119 Views

வடிச்சல் பகுதியை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள  வடிச்சல் பகுதியை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி மாநகர முதல்வரினால் இன்று தடுக்கப்பட்டுள்ளதுடன் அபகரிப்புக்கு கொண்டு வரப்பட்ட பொருட்களும் மாநகரசபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளத்தினை வாவியில் கொண்டுசேர்க்கும் பகுதியாக குறித்த வடிச்சல் பகுதி காணப்படுகின்றது.

நீண்டகாலமாக குறித்த பகுதியை சிலர் அபகரிக்கும் நோக்குடன் வேலி அமைக்க முற்படும் நிலையில் அவற்றினை தடுக்கும் செயற்பாடுகளை பிரதேச மக்களும் மாநகரசபையும் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்துவருகின்றது.

IMG 0166 மட்டக்களப்பு: வடிச்சல் பகுதியை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி தடுத்து நிறுத்தம்

இன்று சிலர் குறித்த வடிச்சல் பகுதியை வேலியிட்டு அடைக்கமுற்பட்டபோது அங்கு சென்ற மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தியதுடன் அது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற பிரதேச செயலாளர் குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தினார்.

குறித்த பகுதியானது அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் குறித்த பகுதியில் எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்கவேண்டாம் எனவும் இதன்போது பிரதேச செயலாளர் வேலியடைப்பில் ஈடுபட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்பகுதியானது அரசகாணியாகவும் வடிச்சல் பகுதியாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் போலியான ஆவனங்களைக்கொண்டுவந்து காவல் துறையினரின் ஆதரவுடன் குறித்த பகுதியை அபகரிக்க முனைவதாக மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

Leave a Reply