‘அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்’: அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் அகதி குடும்பம்

367 Views

அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்

அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்

அவுஸ்திரேலியாவின் பிலோயலா பகுதியில் வசித்து வந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் அவுஸ்திரேலிய குடிவரவுத் துறையினரால்  தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு  நான்காண்டுகள் கடந்திருக்கின்றன. 

பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை அவுஸ்திரேலிய அரசால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2018 மார்ச் 05 அன்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தமிழ் அகதி குடும்பத்தின் வீட்டை சோதனையிட்டு அவர்களை மெல்பேர்ன் தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இந்த நான்கு ஆண்டுகள் நிறைவை நினைவூட்டும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்வில் பல அவுஸ்திரேலியர்கள் கலந்து கொண்டு தமிழ் அகதி குடும்பத்திற்கான ஆதரவை வழங்கியுள்ளனர். இந்நிகழ்வில் பேசிய பிரியா, “எல்லைப்படையினர் திடீரென வந்து எங்களது வீட்டை சோதனையிட்டனர். எங்களது குடும்பத்தை வலுக்கட்டாயமாக தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்றனர்,” எனக் கூறியுள்ளார்.

கடந்த நான்காண்டுகளில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டதாகக் கூறும் பிரியா, தேவையான மருத்துவ உதவிகள் கூட கிடைக்கவில்லை என்கிறார்.  “நாங்கள் அகதிகளாக இருந்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளோம்,” என்ற வருத்தத்தை பிரியா பதிவு செய்துள்ளார்.

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக் கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

2018ல் இக்குடும்பத்தை இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த அவுஸ்திரேலியா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.  இதைத்தொடர்ந்து, இக்குடும்பம் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கான தொடர் போராட்டத்தில் உள்ளது.

கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர்களது இரண்டாவது குழந்தையான தருணிகா பெர்த் (Perth) நகரில் எவ்வித விசாவுமின்றி சமூகத்தடுப்பில் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் பிரியா, நடேசலிங்கம், கோபிகாவுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது குழந்தையான தருணிகா சமூகத் தடுப்பில் இருப்பதால், விசா இருந்தும் பெர்த் நகரை விட்டு வெளியேறி முன்பு வாழ்ந்த பிலோயலா (Biloela) பகுதிக்கு அக்குடும்பம் செல்ல முடியாத சூழல் நிலவுகின்றது.

இன்னும் சில மாதத்திற்குள் அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக இக்குடும்பத்தினருக்கு தேவையான விசாக்கள் வழங்கப்பட்டு பிலோயலா பகுதிக்கு திரும்ப தமிழ் அகதி குடும்பத்தினர் அனுமதிக்கப்படுவார்கள் என நம்புவதாக கூறியுள்ளார் இக்குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிலோயலா பகுதிவாசியான Angela Fredericks.

Tamil News

Leave a Reply