Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1 தமது உயிர் போனாலும் பரவாயில்லை.. | Missing Tamils | Oct12
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருக்கின்றோம். தமது உயிர் போனாலும் பரவாயில்லை. தமது உறவுகள் என்றோ ஒரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டிருக்கும் தாய்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தொடர்ச்சியாக பொறுப்புக் கூறுவதைத் தவிர்த்து வருகின்றது. ஆனாலும் தொடர்ந்து தம் சொந்தங்களைத் தொலைத்த எத்தனைபேர், தொலைத்துவிட்ட சொந்தங்களை மீ்ட்டுவிட வேண்டும், மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு தனது வாழ்க்கைத் துணையை தொலைத்துவிட்டு மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருப்பவர் தான் சிவானந்தன் ஜெனிதா.
“எனது பெயர் சிவானந்தன் ஜெனிதா எனது சொந்த இடம் வேலணை. 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து, மீண்டும் இடம்பெயர்ந்து மல்லாவியில் தங்கியிருந்தோம். அப்போது 1999 ஆம் ஆண்டு சிவலிங்கம் சிவானந்தன் என்பவரைத் திருமணம் செய்திருந்தேன்.
2000 ஆம் ஆண்டு எனக்கு மகன் பிறந்திருந்தார். எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அதன் பின்னர் நாங்கள் 2001 ஆம் ஆண்டு வவுனியாவிற்கு வந்து குட்செட் முகாமில் தங்கியிருந்து, பின்னர் கம்பஸ் முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து வெளியே வந்து வவுனியா மகாறம்பைக் குளத்தில் வசித்து வந்தோம்.
அதன் போது எனது கணவர் சொந்தமாகவே பேருந்து ஒன்றினை வைத்திருந்தவர். வவுனியா -மன்னார் பாதைவழி பேருந்தை செலுத்தி வந்தார்.
2008.05.19 ஆம் திகதி மகாறம்பைக்குளம் பிரதான வீதி, வைரவர் கோவிலடியில் வைத்து பிற்பகல் 1.45 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வவுனியாவிற்கு சைக்கிளில் கடைக்கு சென்று மரக்கறி மற்றும் பேருந்தின் பாகங்களையும் வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது தான் கடத்தப்பட்டார்.
எனக்கு கடத்திய விடயம் தெரியாது. என்னுடைய கணவர் நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என நான் தேடிக்கொண்டிருந்தேன்.
எங்களுடைய பேருந்தில் நடத்துனராக வேலை செய்பவரிடம் கேட்டபோது, தான் அவர் கூறினார் 1 மணிக்கே வந்திட்டார் என்று.
பின்னர் பேருந்து நடத்துனர் தான் கூறினார், வைரவர் கோவிலடியில் ஒரு சைக்கிள் இருக்காம் என்று. அந்த இடத்தில் சென்றபோது சைக்கிள் மட்டுமே கீழே கிடந்தது. பகல் ஆகையால் கணவரை கடத்திச் செல்லும் போது அப்பகுதியிலுள்ள மக்களும் அவ்விடத்தில் ரியூசன் நடக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிருந்ததாகக் கூறினார்கள்.
அதன் பின்னர் பொலிஸார் வந்து சைக்கிளை எடுத்து கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுவிட்டார்கள். பின்னர் நான் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு மேற்கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திலும், அரச புலனாய்வுத் துறையினரிடமும், ஜோசப் முகாம், யூஎன்எச்சிஆர் போன்ற இடங்களிலும் கணவர் கடத்திச் செல்லப்பட்டமையைக் கூறி, முறைப்பாடு மேற்கொண்டிருக்கின்றேன். ஆனால் இதுவரை காலமும் அவர்கள் தேடித்தரவில்லை.
எனது கணவரைக் கடத்தி 8 ஆம் நாள் 50 இலட்சம் ரூபா பணம் கப்பம் கோரினார்கள். நான் என்னிடம் இருந்த நகைகளையும், உறவினர்களிடம் இருந்த நகைகளையும் அடகு வைத்து ஐந்தரை லட்சம் பணத்தை நகரிலுள்ள அப்சரா கூல்பாருக்கு முன்பாக வைத்து கொடுத்தேன்.
ஆனால் பணத்தை வாங்கிச் சென்றவர்கள் தொடர்பாக இன்றுவரை எந்தவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்ட இலக்கம் என்னிடம் இருக்கின்றது. நான் பணம் கொடுத்த விடயம் சிலருக்கு தெரியும்.
கணவரைக் கடத்திய காலத்தில் இருந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றேன். 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளராக உள்ளேன். இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தினமாக ஆவணி மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதனால், ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி நாங்கள் இப்போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
அதற்கிடையில் வேறு விசேடமாக செய்யவேண்டிய தினங்களில் நாங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். அதன்போது அரச புலனாய்வுத் துறையினரால் மிகவும் அச்சுறுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. 2019.09.09 ஆம் திகதி என்னை 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். சென்று வந்திருந்தேன். மீண்டும் 2021.02.07 ஆம் திகதி சுதந்திரதினம் அன்று போராட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு வழங்குவதற்காக எனது வீட்டில் வந்து காவல் இருந்தார்கள். இவ்வாறு இருக்கும் போது தடை உத்தரவுகளை வாங்காமல் எங்களது உறவுகளுக்காக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
தடையுத்தரவை வாங்காது போராட்டத்தை மேற்கொண்டதனால், மீண்டும் 2021.04.07 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கட்டளை ஒன்றை அனுப்பியிருந்தார்கள். பொலிஸ் நிலையம் சென்ற போது, வாக்குமூலங்கள் பெறப்பட்டு அதனை கொழும்பிற்கு அனுப்புவதாகவும், பின்னர் விசாரணைக்கு வருவதாகவும் கூறியிருந்தார்கள். இவ்வாறாக ஒவ்வொரு தினங்கள் வரும்போதும் தடையுத்தரவைத் தருவார்கள். அத்தோடு அச்சுறுத்தல்களும் இருக்கின்றது. இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
2021.08.13 ஆம் திகதி அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் சென்று, அரச புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக எமது வீட்டிற்கு வந்தும், தொலைபேசி மூலமாகவும் அச்சுறுத்திக்கொண்டு இருப்பதாகவும் முறைப்பாடு மேற்கொண்டிருந்தேன். பின்னர் விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். ஆனால் நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காத்திருந்தேன். ஒரு மணித்தியாலயம் கழித்து, மற்றைய தரப்பு வரவில்லை ஆதலால் பின்னர் விசாரணைக்கு அழைப்பதாக கூறியிருந்தார்கள்.
அதன் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு கொழும்பில் இருந்து எமது வீட்டிற்கு வந்திருந்தார்கள். மனித உரிமைகள் சம்பந்தமாக கதைக்கின்ற போது, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டும் எந்தவித உண்மை நிலையும் கண்டறியப்படவில்லையென நான் கூறினேன். கடிதத்தை காண்பித்திருந்தேன். தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு கூறுவதாகக் கூறிச் சென்றார்கள்.
எமது உயிர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் தான், எமது உறவுகள் என்றோ ஒரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையில், எமது உயிர் போனாலும் பரவாயில்லை எனப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறாக தன் கணவனைத் தொலைத்த அந்த அம்மாவிடமிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் வலி நிறைந்ததாகவும், கணவன் திரும்ப வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன் கலந்த ஒரு எதிர்பார்ப்பும் நிரம்பியிருந்தது.
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை இன அழிப்புத்தான். தன் கணவனைத் தொலைத்துவிட்டு, கரம் நீட்டத் துணையின்றி, நடுவீதியில் தவிக்கும் அந்த அம்மாவிற்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை. தமிழ் ஆட்சியாளர்களே! இவர்களுக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது உங்கள் கடமையே!
[…] அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருக்கின்றோம். தமது உயிர் போனாலும் பரவாயில்லை. தமது உறவுகள் என்றோ ஒரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டிருக்கும் தாய் […]
[…] அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருக்கின்றோம். தமது உயிர் போனாலும் பரவாயில்லை. தமது உறவுகள் என்றோ ஒரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டிருக்கும் தாய் […]